Breaking
Sun. Nov 24th, 2024
(அஸீம் கிலாப்தீன்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனத்தை ஆட வந்த சிங்கள மாணவர்களை வீரத்தோடு அடித்துத் துரத்தி விட்டோம்’ என்ற இருமாப்புடனான பல தமிழ்ப் பதிவுகளை இன்று முகநூலில் காணக் கூடியதாக இருப்பது வருத்தத்தைத் தருகிறது.

தேசிய கீதத்தைத் தமிழில் பாட உரிமை கேட்கிறோம். எங்கும் அரங்கேற்றிட உரிமையுள்ள தேசிய நடனத்தை விழாவில் ஆடினால் அடித்துத் துரத்துகிறோம். மிகவும் மோசமான உளப்பாங்கல்லவா இது?

பல்கலைக்கழகங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவை. அதிலும் யுத்த பூமி என்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்னும் விஷேடமானது.

‘யாழ்ப்பாணமானது, இப்பொழுதும் ஒரு கலவர பூமியாகவே இருக்கிறது’ எனவும், ‘அங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் சிறு விடயத்துக்கும் கலவரங்களை உண்டுபண்ணக் கூடியவர்கள்’ எனவும் உலகுக்குக் காட்டும் தேவை இப்போதும் அரசுக்கு இருக்கிறது.

இராணுவத்தை முற்றுமுழுதாக வடக்கிலிருந்து அகற்றும்படி கோரிக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, இராணுவத்தை வடக்கில் இன்னும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இம் மாதிரியான ஒரு சம்பவம் கூட அரசுக்குப் போதும்.

இம் மாதிரியான வன்முறைகளில் ஈடுபடும்போது அல்லது பிறரால் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படும்போது, சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்கும் தமிழ் பேசும் மாணவர்களது நிலைப்பாட்டையும் கருத்திற் கொள்ள வேண்டும். தீயின் திரி தொடர்ச்சியாகப் பற்றி எரியத் தொடங்குமானால் இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இப்போது மாத்திரமல்ல. அது அடுத்த தலைமுறைக்கான கல்வியையும், இன்னும் ஓரிரு வருடங்களில், இத் தலைமுறைக்கான தொழில்வாய்ப்புக்களையும் கூடப் பாதிக்கும்.

இச் சிறிய தீவில், இழப்புக்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு மாத்திரமானதே. சிந்தித்து செயற்படுங்கள்.

வன்முறையில் வீரமில்லை. வனாந்தரங்களில் வேட்டைக்கென வைக்கும் பொறிகள் வைப்பவர்களைத் தவிர, வேறெவரினதும் பார்வைக்குத் தெரிவதில்லை.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *