உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசேவேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலைபேசி மூலம் உரையாடிக் கொண்டிருந்தபோது பிடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் “வைரஸாகி” வருகிறது.
உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவேனி கிராமப் புறத்திலுள்ள வீதியொன்றுக்கு அருகில் கதிரையில் அமர்ந்து தொலைபேசியில் உரையாடுவதும் சற்று தொலைவில் அவரின் வாகனத் தொடரணி காத்திருப்பதும் அப்புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
உகண்டா அரசாங்க ஊடகத்துறை அதிகாரியான டொன் வொனியாமா இப்புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். சுமார் 30 நிமிட நேரம் ஜனாதிபதி முசேவேனி தொலைபேசியில் உரையாடினாரென வொனியாமா தெரிவித்துள்ளார்.
வாகனத்திலேயே அமர்ந்து உரையாடாமல் எதற்காக வீதியோரத்தில் கதிரை போட்டு அமர்ந்து ஜனாதிபதி முசேவேனி உரையாடினார் என்பது தெரியவில்லை.
ஆனால், இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜனாதிபதி முசேவேனி தொலைபேசியில் உரையாடும் காட்சியை வேறு பல புகைப்படங்களில் பொருத்தி டுவிட்டரில் பலர் வெளியிட்டுள்ளனர்.
71 வயதான யோவேரி முசேவேனி 5 ஆவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த மே மாதம் மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.