இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு ஒரு சட்டம் பெளத்தர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது. முஸ்லிம்களின் புனித குர்ஆனின் சட்டங்கள் இலங்கையின் சட்டங்களுக்கு சில வகைகளில் முரணாக அமைந்துள்ளன.
பொதுபலசேனா அமைப்புடன் இணைந்து சிங்கள ராவய அமைப்பும் இலங்கையில் குர்ஆனை தடை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. என சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
புனித குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்ற பொதுபலசேனாவின் ஆலோசனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே அக்மீன தயாரத்ன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை பல மதங்களைக் கொண்ட நாடாக இருக்கலாம். ஆனால் சட்டங்கள் இனங்களின் அடிப்படையில் வேறுபட்டதாக இருக்க முடியாது.
அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும். இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று தனியான முஸ்லிம் சட்டங்கள் இருக்கின்றன.
முஸ்லிம் ஆண் ஒருவருக்கு நான்கு பெண்களை மனைவியர்களாக வைத்துக் கொள்ள முடிகிறது. இது இஸ்லாமிய சட்டம் இந்தச் சட்டம் பௌத்தர்களுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. ஒரு பௌத்தர் 4 மனைவியர்களை வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கென்றே மதம் மாறுகிறார். இஸ்லாத்துக்கு மாறி நான்கு திருமணம் செய்து கொள்கிறார்.
இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரம் தான் பள்ளிவாசல்களை மூடிக்கொண்டு இரகசியமாக மத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஏனைய இந்து, கிறிஸ்தவ மதங்களில் இவ்வாறல்ல அவர்களின் வணக்க வழிபாடுகள் திறந்தனவாக அமைந்துள்ளன. எனவே பௌத்த மக்கள் முஸ்லிம்கள் மீது சந்தேகம் கொள்வதற்கு இது காரணமாக அமைந்துள்ளது.
மனிதப்படுகொலைகளைப் புரியும் ஐ.எஸ்.மற்றும் ஜிஹாத் தீவிரவாதிகள் அல்லாஹு அக்பர் என்று கூறிக் கொண்டு குர்ஆனையும் கையிலேந்தியிருக்கின்றனர்.
இது குர்ஆன் மீது சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
குர்ஆன் தீவிரவாதத்தையே போதிப்பதாக ஊகிக்க முடிகிறது. அதனால் குர்ஆன் தொடர்பில் சிங்கள ராவய பலஆய்வுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு குர்ஆன் தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி செயற்படும் என்றார்.