ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு வாகனங்களால் ஏற்படுத்தப்பட்ட 10 விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணி எம்.பி.யான உதய கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு சபா பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிவேட்டில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதியில் இருந்து 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்குரிய வாகனங்கள் விபத்துக்குள்ளான தடவைகள் எத்தனை? இவற்றில் மரணித்த மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை? விபத்தை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என உதய கம்மன்பில எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதியமைச்சர் நிரோஷன் பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட பதிவேட்டில், 10 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 11 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்களை குறைப்பதற்கு வினைத்திறன் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என பதிலளிக்கப்பட்டுள்ளது.