பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத் தோற்றுவித்திருந்தது.
ஆகவே அவ்விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தது. அக்கடிதம் தொடர்பில் ஞானசார தேரர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘ முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியொன்றை நபி(ஸல்) அவர்களூடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு ‘ தெரிவித்திருந்தார்.
அவர் இவ்வாறு இஸ்லாத்தை நிந்திக்கும் வகையில் வெளியிட்ட கருத்துகள் முஸ்லிம் சமூகம் உட்பட பல்வேறுபட்ட தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக தொடர்ந்து தெரிவிக்கும் மத நிந்தனைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். மேலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில் உட்பட பொது அமைப்புகளும் ஜனாதிபதிக்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதேவேளை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஆர்.ஆர்.டி. அமைப்பு பொலிஸ் மா அதிபரிடம் மூன்று முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளது. அம்மூன்று முறைப்பாடுகளும் பொலிஸ் மா அதிபரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவில் ஞானசார தேரர் விசாரணைக்குட்படுத்தப்படுவார் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரர் வெளியிட்டுள்ள மத நிந்தனை கருத்துகள், அதனைந்தொடர்ந்து எழுந்துள்ள அதிர்வலைகள் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்தை நடத்தியபோதே, அவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.