அரசு, எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதியை நோன்புப் பெருநாள் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதால் முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி பெருநாள் தினத்தையடுத்த தினங்களான 7 ஆம் திகதி வியாழக்கிழமை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களையும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தும்படி முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி அமைச்சருக்கு இது தொடர்பான கடிதமொன்றினை அமைச்சர் ஹலீம் அனுப்பி வைத்துள்ளார்.
வழங்கப்படும் இரண்டு விடுமுறை தினங்களுக்குப் பதிலாக வேறு விடுமுறை தினங்களில் பாடசாலை நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் இந்த விடுமுறையினை வழங்கும்படி அமைச்சர் ஹலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது விடுமுறையின் கீழ் இருக்கும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிறை பார்க்கப்பட்டே பெருநாள் தினம் நிச்சயிக்கப்படுவதால் பிறை தென்படாது விடின் ஜூலை 7 ஆம் திகதியே நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும்.
அவ்வாறாயின் முஸ்லிம் பாடசாலைகள் ஜூலை 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாத்திரமே பதில் பாடசாலை நடத்தும் நிபந்தனையின் கீழ் விடுமுறை பெற்றுக்கொள்ள வேண்டியேற்படும்.