ஐரோப்பிய ஒன்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை தொடர்ந்து, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சிறுபான்மையினர்களை குறிவைப்பது என்று அந்த அமைப்பு கூறும் அதிர்ச்சி தரும் சம்பவங்களுக்கு பிரிட்டன் இஸ்லாமிய சபை கண்டனங்களை தெரிவித்துள்ளது.
சமூக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சபையின் தலைவர் ஷூஜா ஷஃபீ தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது எழுந்துள்ள பிளவுகளை சரி செய்ய ஒன்றிணையுமாறு, உலகத் தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
முஸ்லீம்களை அவமதிக்கும் விதமாக ”சொந்த நாட்டிற்கு திரும்பி செல்” , அல்லது அது போன்ற கருத்துக்கள் வெளிப்படுத்தப்படும் சம்பவங்கள் குறித்து தனக்கு எண்ணற்ற தகவல்கள் வருவதாக அவர் கூறியுள்ளார்.
இச்சூழலில், லண்டனில் இருந்த போலிஷ் சமூக கட்டிடம் ஒன்று சூறையாடப்பட்ட நிலையில், இது உட்பட பல தொடர்ச்சியான வெறுப்புணர்ச்சி குற்ற சம்பவங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் போலிஷ் தூதர் விடோல்ட் சோப்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.