கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எனவே பொது மக்கள் விழிப்புடனும் தமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர். விஜேமுனி தெரிவித்தார்.
குளிர்சாதனப் பெட்டியிலுள்ள தட்டுகள் (டிரேக்களில்) அதிக நுளம்புகள் முட்டையிட்டு பெருக்கம் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை சுத்தமாக வைத்திருக்குமாறும் அறிவுரை வழங்கினார்.
இது தொடர்பாக கொழும்பு மாநாகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் விஜேமுனி மேலும் கூறுகையில்,
இலங்கை முழுவதும் அதேபோன்று மேல்மாகாணம் உட்பட கொழும்பு மாநகரிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. கொழும்பு மாநகருக்குள் 1694 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த தொகையில் 1355 பேருக்கு டெங்கு நோய் தோற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட நூற்றுக்கு 16 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
டெங்கு நுளம்புகள் அதிகம் பரவும் இடங்களாக கிருலப்பணை, கிருள வீதி, பாமன்கடை, நாரஹேன்பிட்டி,வெள்ளவத்தை, மிலாகிரிய, முகத்துவாரம், வனாத்தமுல்ல, தெமட்டகொடை என பல பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
விசேடமாக வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் தட்டுகளில் (டிரேயில்) தான் பெண் நுளம்புகள் அதிகம் முட்டையிட்டு நுளம்பு பெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே தத்தமது வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளை சுத்தமாக வைத்திருக்குமாறும், சுற்றுச் சூழலை நுளம்புகள் பெருகாத விதத்தில் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நுளம்புகளை அழிப்பதற்காக புகை அடித்தல், இரசாயன திரவம் தெளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் விஜேமுனி தெரிவித்தார்.