முஸ்லிம் சமுதாயத்தில் புதிய பரம்பரைக்கு இடமளித்து சமுதாய அரசியலில் புதிய இரத்தத்தைப் பாய்ச்சுவதற்கு வாய்ப்பளித்தே பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து முழுமையாக விலகியுள்ளேன் என்றாலும் தூய்மையான செயற்பாடுகளுக்கான எனது போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
பிரதிநிதித்துவ அரசியலிலிருந்து முழுமையாக விலகிக் கொள்வதாகவும், என்றாலும் முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவராக தொடர்ந்தும் இருப்பேன் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அவரது அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ‘நலிந்து கிடக்கும் முஸ்லிம் அரசியலை இளம் பரம்பரையினர் புதிய உத்வேகத்துடன் நிமிர்த்துவதற்கு வழிவிட்டிருக்கிறேன். இளம் தலைமுறையினருக்கு வழிவிடும் செயற்பாடுகளில் முன்னோடியாக இருக்க விரும்பினேன்.
எனது உயிர்பிரியும் வரை நான் வளர்த்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே இருப்பேன். கட்சியை வழிதவறாது பாதுகாக்கும் விடயத்தில் முன்னிலை வகிப்பேன்.
சமகால அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் தேசிய அடையாள அரசியல் சமூகத்தின் பிரதான அரசியல் அபிலாசையை பலி கொடுக்கும் அளவுக்கு பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கத் துவங்கியிருக்கிறது.
இவ்வாறான கால கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இருப்பும் தலைமைகளின் நம்பகத் தன்மையும் உறுதிப்பாடும் இவைபோல இக்கட்சியின் உயிர்ப்பும் துடிப்பும் தூய்மையும் பாதுகாத்துப் பேணப்பட வேண்டியது அத்தியாவசியமாகும்.
தற்போதைய அனைத்து அரசியல் பிரமுகர்களும் சமுதாய ஈடேற்றம் பற்றிய பிரக்ஞையற்று பதவிகளையும் சலுகைகளையும் செளகரியங்களையும் குறிவைத்தே அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் முஸ்லிம் குடிமைச் சமூகத்தால் முன்வைக்கப்படுகிறது.
எனது தனிப்பட்ட அரசியல் நம்பகத்தன்மையைக் காத்துக் கொள்ளும் வகையில் பிரதிநிதித்துவ அரசியலில் இனி ஒருபோதும் ஈடுபடுவதில்லை என்ற கடினமான முடிவுக்கு வந்துள்ளேன்.
சமகால முஸ்லிம் அரசியலில் பதவிகளைப் பெறும் இலக்குகளற்ற ஒரு பாத்திரத்தின் மூலம் செயலாற்ற முடிவெடுத்துள்ளேன்.
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராக தொடர்ந்து இருந்து கட்சியைத் தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமான அரசியல் செயற்பாட்டாளனாக எனது எஞ்சிய வாழ்நாள் நெடுகிலும் இருக்க விரும்புகிறேன்.
நான் அரசியலில் பிரவேசித்த ஆரம்பகாலத்திலிருந்து இன்று வரை தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஒரு பாலமாகச் செயற்பட்டுள்ளேன் என்ற மனத்திருப்தி எனக்கிருக்கிறது.
எந்தவொரு அரசியல் கட்சியிலும் எவரும் நேர்கோட்டை வரைய முற்படுகின்ற போதெல்லாம் பதவிகளை நாடிய மூன்றாம் தர நடவடிக்கைகளாக அவை சோடித்துக் காட்டப்பட்டு நேரிய மாற்றங்களுக்கான முயற்சிகள் தோற்கடிக்கப்படுகின்றன.
எனவே புறவிமர்சனங்களை சுயவிமர்சனங்களாக மாற்றிக்கொண்டு சோடனைக் குற்றச்சாட்டுக்குள் இருந்து விடுபடுகிறேன் என்றார்.