(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் ,சம்மாந்துறை)
மிக நீண்ட காலமாக சம்மாந்துறை பிரதேசத்திற்கான மடுவம் கைகாட்டியென அழைக்கப்படும் பிரதேசத்தில் இயங்கி வருகிறது.இம் மடுவம் அமைந்துள்ள பகுதி சில காலங்கள் முன்பு மக்கள் நடமாற்றம் குறைவாக இருந்த ஒரு பகுதி என்பதால் அது இயங்குவதில் பெரிதான சிக்கல்கள் இருக்கவில்லை.
தற்போது அதனைச் சூழ மக்கள் குடியேறி வருவதால் இம் மடுவத்தின் அமைவிடம் மக்களுக்கு சிரமத்தை வழங்குவதோடு ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கின்றது.இதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதோடு அப் பகுதியில் நாய்களின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன.அதிகரித்த நாய்த் தொல்லை காரணமாக அப் பகுதி மக்களின் சுதந்திரமான நடமாட்டம் பறி போயுள்ளது.சுகாதார ரீதியாக நோக்குகின்ற போதும் அவ் மடுவத்தின் அமைப்பு அவ்வளவு உசிதமானதாகயில்லை.மழை காலத்தில் சுகாதாரச் சீர் கேடுகள் மிகைத்துக் காணப்படுவதான குற்றச் சாட்டுகளுமுள்ளன.இது தொடர்பில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தொடர்ந்தும் பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்திருந்தன.
இதனை கருத்திற் கொண்ட சம்மந்துறையின் கலைக்கப்பட்ட பிரதேச சபைத் தவிசாளர் நௌசாத் அவர்களின் முயற்சியினால் புறநெகும திட்டத்தின் கீழ் சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரிக்கு அண்மையில் ஒரு புதிய மடுவம் ஒரு கோடி இருபத்து மூன்று இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது (நீர்,மின்சாரச் செலவுகள் தவிர்ந்து).இதற்கான நீர்,மின்சார வசதிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு வரப்பட்டிருந்தன.இப்படி மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்ட இம் மடுவம் இன்று கேட்பாரற்றிருப்பது கவலைக் குரிய விடயமாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இதனைத் திறப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது தேர்தலைக் காரணம் காட்டி அம் முயற்சி தடுக்கப்பட்டிருந்தது.ஜனாதிபதித் தேர்தல் முடிந்து வருடமொன்று கழிந்து அடுத்த வருடத்தின் நடுப் படுகுதியில் உள்ள போதும் அம் மடுவம் திறக்கப்படாமல் உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.சம்மாந்துறை பிரதேச சபை இதனைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.கோடிகள் செலவு செய்து மடுவத்தைக் கட்டியது அழகு பார்க்கவா?
சில நாட்கள் முன்பு சம்மாந்துறையின் சில இறைச்சிக் கடைகள் சுகாதாரத்திற்கு ஏதுவாகயில்லை என்ற காரணத்தால் அவற்றில் இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தது (தற்போது சம்மாந்துறை நீதி மன்றம் அவற்றை மீளத் திறக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது).இக் கடைகளை சுகாதார வசதிகளுடன் அமைப்பதை அக் கடைகளை குத்தகைக்கு எடுத்த நபர்கள் செய்வதா அல்லது சம்மாந்துறை பிரதேச சபை செய்து கொடுப்பதா? என்ற பிரச்சினை நிலவுகின்றதாம்.அக் கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்களிடம் அதனைச் செய்யக் கோருவது எந்த வகையிலும் நியாயமாகாது.சம்மாந்துறை பிரதேச சபை கண்ணாடிகளாலான சிறந்த இறைச்சிக் கடைகளையும் உடனடியாக அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.