Breaking
Sun. Nov 24th, 2024

இந்த சந்திப்பானது வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில், கடந்த 18-06-2016 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதான திறப்பு விழாவிற்கு வருகை தந்த வேளை, வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தனது சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கையில்,

இந்த கலந்துரையாடலில் முக்கியமான இரண்டு விடயங்கள் தொடர்பில் தாம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும், குறிப்பாக தனது அமைச்சு தொடர்பான அதாவது போக்குவரத்து நியதிச் சட்டம் தொடர்பாகவும் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் தாம் அவருடைய விசேட கவனத்திற்குக் கொண்டுவந்ததாகவும் தெரிவித்ததோடு.

கடந்த மாகாண சபை அமர்வின்போது, வட மாகாணத்திற்கான பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஒன்றை உருவாக்குவதற்க்கான நியதிச் சட்டம் இறுதி அங்கீகாரம் பெறப்பட்டிருப்பதாகவும், இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நியதிச்சட்டமானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளதாகவும், அவ்வாறு அனுப்பப்படவுள்ள இவ் நியதிச் சட்டத்தை உடனடியாக அங்கீகரிக்க ஆவன செய்யுமாறும், அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவுடன் வடக்கில் உள்ள போக்குவரத்து சீர்கேடுகளை விரைவாக நிவர்த்தி செய்யவுள்ளதாகவும், அத்தோடு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமான போக்குவரத்து சேவையை வழங்க தாம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாம் ஆளுநருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக ஜனாதிபதி அவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, இவ்வாறாக அனுமதிக்கப்பட்டவுடன் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் இருப்பதை பார்க்கிலும் மிகவும் தரமான ஓர் சேவையை எனது மக்களுக்கு வழங்குவேன் என்றும் வடக்கு மாகாணத்தை போக்குவரத்து துறையிலே வளர்ப்பதே தமது பிரதான நோக்கம் எனவும், நியதிச் சட்டம் அமுலானதும் சட்டம் தனது கடமையை சரியாகச் செய்யும் எனவும் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

அத்தோடு  நீண்ட காலமாக எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய பலரும், அரசியல் கைதிகள் பலரும் இன்னமும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள் அந்த நிலையிலே அவர்களது குடும்பங்கள் எமது மாகாணத்தில் மட்டுமல்ல கிழக்கு மற்றும் ஏனைய மாகாணங்களிலும் வறுமையாலே அன்றாட உணவுக்கு கஷ்டப்பட்டுக்கொண்டும், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி என்பன வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  குறித்த சந்தர்ப்பத்தில் தாம் ஜனாதிபதிக்குத் தெரிவித்ததாகவும்.

அதே சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்கையில் கடந்த காலத்தில் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியதோடு இவ்வாறு படிப்படியாக ஏனையவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கருத்தையும் தமக்குத் தெரிவித்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *