Breaking
Sun. Nov 24th, 2024
(எம்.ஐ.முபாறக்)

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கோட்டையாக உள்ள ஈராக்கும் சிரியாவும் அவர்களின் கைகளில் இருந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகின்றது. அந்நாடுகளின் அரசுகள் இப்போது அவர்கள்மீது நடத்தி வரும் கடுமையான தாக்குதல்கள் இறுதித் தாக்குதல்களாக அமையும் என்றே தோன்றுகின்றது.

2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த நாடுகளின் முக்கிய இடங்களைக் கைப்பற்றும்போது இருந்த அதே அசூர வேகம் இன்று அவர்களிடம் இல்லை.அவர்களின் எதிரிகள் உசாராகி பலத்தை அதிகரித்துக் கொண்டமையே இதற்குக் காரணம்.

சிரியாவில் ஐ.எஸ் களின் தலைநகராக உள்ள ரக்கா பிராந்தியத்தைக் கைப்பற்றும் சிரியா  அரசின் படை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள அதேவேளை,சிரியாவில் இயங்கும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட சிரியா ஜனநாயகப் படை என்ற குர்திஷ் படையும் மறுபுறம் ஐ.எஸ்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடக்கியுள்ளன.

அதேநேரம்,ஈராக்கில் ஐ.எஸ்களின் வசமிருக்கும் இரண்டு பெரும் நகர்களுள் ஒன்றான பலூஜாவைக் கைப்பற்றும் படை நகர்வுகள் மறுபுறம்  இடம்பெறுகின்றன.ஈராக்கிய படையினர் பலூஜா நகரை இப்போது அண்மித்துள்ளனர். அங்கு கடும் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பலூஜா நகருக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளதால் அங்குள்ள 50,000 மக்கள் பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை பலர் அவ்வாறு உயிர் இழந்துள்ளனர்.பலூஜா நகரின் புறநகர்கள் பல ஈராக்கிய படையினரின் கைகளுக்கு இப்போது வந்துள்ளன.பலூஜா முழுமையாக ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அந்த நகர் முழுமையாக வீழ்ந்தால்  ஐ.எஸ்கள் வசம் எஞ்சி இருக்கப் போவது மொசூல் நகர் மாத்திரம்தான்.அதுவும் மீட்கப்பட்டால் ஈராக் ஐ.எஸ் இயக்கம் இல்லாத ஈராக்காக மாறும்.

மறுபுறம்,லிபியாவிலும் ஐ.எஸ்.இயக்கம் பாரிய தோல்விகளைச் சந்தித்துள்ளது.சிரியாவும் ஈராக்கும் அவர்களிடமிருந்து விடுபடுமாக இருந்தால் அவர்களின் அடுத்த தளமாக  லிபியாவை வைத்திருப்பதே   அவர்களின் திட்டமாக இருந்தது.ஆனால்,அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை.

எல்லாப் பக்கமும் அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெறுவதால் அவர்கள் நாடில்லா இயக்கமாக மாறும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.இதனால் அவர்கள் இப்போது அவர்கள்மீது தாக்குதல் நடத்தி வரும் நாடுகள்மீது கவனத்தைச் செலுத்தியுள்ளனர்.குறிப்பாக,அவர்களின் இப்போதைய இலக்காக இருப்பவை பிரிட்டன்,பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளாகும்.

ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் மீது இந்த இயக்கம் ஒரு தடவை தாக்குதல் நடத்திவிட்டது.இரண்டு நாடுகளிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி பிரான்ஸில் 130 போரையும் பெல்ஜியத்தில்  32 போரையும் ஐ.எஸ் இயக்கம் கொலை செய்திருந்தது.

இந்த நிலையில்,மீண்டும் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.பயங்கரவாதிகள் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.ரமழான் மாதம் முழுவதும் ஐரோப்பா மீதான தாக்குதல் மாதமாக அந்த இயக்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் தலைநகர் பரிசில் இடம்பெற்று வரும் EURO 2016 என்ற உதைப் பந்தாட்ட நிகழ்வைக் குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில்,பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் மீது தாக்குதல் நடத்துவதற்காக சிரியாவில் இருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் குழுவொன்று 10 நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டதாக பெல்ஜியம் நாட்டு புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இவர்கள் கடவுச் சீட்டுக்கள் இன்றி துருக்கி மற்றும் கிரேக்கம் ஊடாக கப்பல்கள் மூலம் ஐரோப்பாவை வந்தடையவுள்ளனர் என்று பெல்ஜியம் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.இதனால் முழு ஐரோப்பாவும் இன்று அச்சத்திலும் பதட்டத்திலும் மூழ்கியுள்ளது.

மேற்படி உதைப்பந்தாட்ட நிகழ்வை ஒட்டி பிரான்சில் இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ரசிகர்கள் தொடர்ச்சியாக மோதல்களில் ஈடுபட்டு வருவதால்  அது ஐ.எஸ்.அமைப்புக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று பிரான்ஸ் அரசு கருதுகிறது.

இரவு பகலாக அவர்கள் குடித்துவிட்டு இவ்வாறு வீதிகளில் மோதி வருவதால் அவர்கள் மத்தியில் ஊடுருவுவது ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு இலகுவான காரியமாகும்.இதனால்,நகரில் ரசிகர்கள் ஒன்று கூடி வெற்றிக் கொண்டாட்டங்களை கொண்டாட விடாமல் பொலிசார் தடுத்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கூட ஸ்லோவாக்கிவா அணியிடம் ரஷ்ய அணி தோல்வியடைந்ததை இங்கிலாந்து ரசிகர்கள் வீதிகளில் கொண்டாடினர்.பொலிசார் இதற்கு அனுமதிக்கவில்லை.கண்ணீர் புகை கொண்டு அவர்களை விரட்டியடித்தனர்.

இவ்வாறு பிரான்ஸில் இடம்பெறும் உதைப்பந்தாட்ட நிகழ்வை ஒட்டி பரிஸ் நகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.உதைப் பந்தாட்ட ரசிகர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதைக் கவனத்தில்கொள்ளாது அவர்கள் தொடர்ச்சியாக மோதி வருவதால் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பிரான்ஸ் அரசு தடுமாறுகின்றது.

இதனால்,பிரான்ஸ் ஒரு பதட்டமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளது.முழு ஐரோப்பாவுமே ஒரு வகையான அச்சத்தில் இப்போது மூழ்கி இருக்கின்றது.அமெரிக்காவின் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு இந்த அச்சத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த விடயத்தில் மிகவும் அச்சத்தில் மூழ்கி இருப்பது பிரான்ஸ்தான்.ஒரு மாதத்துக்கு இடம்பெறவுள்ள EURO 2016 உதைப்பந்தாட்ட நிகழ்வில் எதுவித அசம்பாவிதமும் நடந்துவிடாமல் பாதுகாப்பது பிரான்ஸ் எதிர்நோக்கி இருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.இதை எப்படி பிரான்ஸ் சமாளிக்கப் போகின்றது என்று இன்று முழு உலகமும் பார்த்து நிற்கின்றது.

unnamed (1)
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *