மக்களுக்கு தேவை வீடுகளே தவிர இரும்புக்கூடுகள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து உரிய தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பிரச்சனைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பான சர்ச்சை குறித்த தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டார்.
அதன்போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மக்கள் 65 ஆயிரம் விட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
மக்களுக்கு தேவை வீடுகளே தவிர இரும்புக்கூடுகள் அல்ல. இந்த விடயத்தில் ஒரு இறுதியான முடிவொன்று எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு உங்களுடைய (அமைச்சின்) ஆதரவும் எமக்கு தேவை. 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக உரிய தீர்வொன்றை அனைவரும் இணைந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்போது “சரி ஐயா” எனக்கூறியவாறே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தனது உரையைத் தொடர்ந்தார்.