(டெனிஸ்வரன் முகநுால்)
கடந்த 03-03-2016 வியாழன் காலை 10 மணியளவில் கொழும்பு சீநோர் விடுதியில் (Cey – Nor Hotel ) மத்திய மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக, இலங்கையில் மீன்பிடி தொடர்பாக இருக்கின்ற பிரச்சினைகளை ஆராய்தலும், அவற்றை சீர் செய்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்தலும் மற்றும் மத்திய, மாகாண மீன்பிடி அமைச்சர்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்ப்படுத்தலுமே விடயப்பொருளாக காணப்பட்டது.
அந்த வகையில் மேற்படிக் கலந்துரையாடலுக்கு இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராட்சி அவர்களும் 9 மாகாணங்களினதும் மீன்பிடி அமைச்சர்கள் அமைச்சர்களின் செயலாளர்கள் மற்றும் நாறா, நக்டா நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்ற பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்ப்படி விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பல்வேறு விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார், குறிப்பாக மத்திய, மாகாண அரசுகள் இணைந்து செயற்ப்பட்டாலே நாட்டில் அபிவிருத்தியைத் துரிதகதியில் ஏற்ப்படுத்தமுடியும் எனவும், அதே நேரம் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்ப்படுமெனில், எமது நாட்டை சிங்கப்பூருக்கு நிகராக கொண்டுவருவதற்கு ஐந்து வருடம் போதுமானது, ஆகவே இந்த விடயத்தில் மத்திய அரசு எல்லா இன மக்களையும் அரவணைத்து அவர்களுக்கான உரிமைகளை அங்கீகரிப்பதிலேயே மேற்ப்படி விடயம் தங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய இழுவைப் படகினால் எமது கடல்வளம் மாத்திரமல்ல வறிய மீனவர்களது மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்படுகின்றது, அத்தோடு எமது நாட்டில் உள்ள ஒரு சில மீனவர்களால் செய்யப்படுகின்ற தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளாலும் கடல்வளம் வெகுவாகப் பாதிப்படைகின்றது, அத்தோடு தென்பகுதி மீனவர்களின் அளவுக்கதிகமான வருகையினால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காடியிருந்தார்.
மேற்ப்படி விடயங்களை உரிய முறையில் கட்டுப்படுத்தி மேற்ப்பார்வை செய்யவில்லையெனில் கடல்வளம் வெகுவாகப் பாதிப்படைந்து எமது எதிர்காலச் சந்ததியினர் கடல்வளத்திற்கு கையேந்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்திய இழுவைப் படகு தொடர்பிலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணவேண்டும் என்றும், இந்த நடவடிக்கை இரண்டு நாட்டினதும் உறவுகளைப் பாதிக்காதவண்ணம், குறிப்பாக எமது மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்ப்படுத்தாத வண்ணம் இராஜதந்திர ரீதியில் செயல்ப்படுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த மத்திய மீன்பிடி அமைச்சர் அவர்கள், மிக விரைவாக தாம் இந்தியா சென்று மேற்ப்படி விடயம் தொடர்பாக கலந்துரையாட உள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரையும் இணைத்துக் கொண்டு இந்திய இழுவைப் படகுகள் தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் அவர்கள் வடக்கு மாகாணத்தின் மீன்பிடி தொடர்பிலான அபிவிருத்திகளை மேற்கொள்ளும்பொருட்டு, கடல் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பாக ஏறக்குறைய 4136 மில்லியன் ரூபாய்க்குமானதும், நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி தொடர்பாக 544 மில்லியன் ரூபாய்க்குமான அபிவிருத்தி திட்ட வரைபுகளை மத்திய அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
* இதில் வறிய மீனவர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்கள்.
* இறங்கு துறைகள் அமைத்தல்.
* துறைமுகங்கள் அமைத்தல்.
* மீன் மற்றும் கருவாடு பதனிடும் தொழிற்சாலைகள் அமைத்தல்.
* மீன்பிடிக் கிராமங்களை உருவாக்கி அடிப்படைக் கட்டுமான வசதிகளை அமைத்துக்கொடுத்தல்.
* நன்னீர் மீன்குஞ்சுகளை அதிகமாக வைப்பிலிடுதல்.
* மீன்குஞ்சுகளை உற்பத்திசெய்யும் பண்ணைகளை உருவாக்குதல்.
* மீன் வளர்ப்புப் பண்ணைகளை (Aqua Culture ) உருவாக்குதல்.
என்பன உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இச் சந்தர்ப்பத்தில் மத்திய அமைச்சர் பின்வரும் வாக்குறுதிகளை வழங்கியிருந்தார், இந்த ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் பரித்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் பல மில்லியன் செலவில் துறைமுகங்கள் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதேவேளை வருகின்ற ஆண்டு மன்னார் பேசாலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் (ADB ) துறைமுகம் அமைத்துத் தரவுள்ளதாகவும் மேலும் வடக்கு மாகாணத்தில் 21 இறங்குதுறைகள் அமைத்துத்தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அச் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் மேற்ப்படி விடயத்துக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்ததோடு, இவ்வாறான விசேட ஒன்றுகூடல்கள் எதிர்காலத்தில் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு தடவையாவது நடாத்தப்பட்டால் இலங்கையில் மீன்பிடி தொடர்பாகவுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வுகாணமுடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கின்றார்.