அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மாவட்டத்தில் ஜ.த.தே. கூட்டமைப்பு, தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து சபை அமைக்கும் என நம்புகின்றோம். – சாள்ஸ் நிர்மலநாதன்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன்வருவார்கள் என நம்புவதாக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான சபைகளை அமைக்கும் நடவடிக்கைகள் உள்ளூராட்சி ஆணையாளரினால் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் 5 சபைகளுக்கான தவிசாளர்கள் தெரிவு செய்கின்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

அதன் அடிப்படையில் ஒரு விடயத்தை மக்களுக்கும் போட்டியிட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கையாகவும், தெளிவுபடுத்தலையும் வழங்கும் வகையில் இந்த ஊடக சந்திப்பை மன்னார் மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபை தவிர மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 4 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் கிளையின் நோக்கம் தமிழ் கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் சபைகளை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, நாங்கள் செயற்பட்டிருந்தோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் தெரிவின்போது கூட மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக வீட்டுச் சின்னத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் போட்டியிட்டது.

தேர்தலுக்கு முன்னர் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது. ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்கள் எடுக்கின்ற கட்சிக்கு மற்றைய கட்சி ஆதரவு வழங்குவதாக இணக்கப்பாடு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் நாங்கள் மன்னார் பிரதேச சபையில் தலைமன்னார் பியர் வட்டாரத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளரை நியமிக்கவில்லை.

அதே போல் மாந்தை மேற்கு பிரதேச சபையில் விடத்தல் தீவு இரட்டை தொகுதி வட்டாரத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளரை நியமித்தால் டி.ரி.என்.ஏ. கட்சியினர் வெற்றி பெற முடியாது என்ற காரணத்தால் அங்கும் நாங்கள் வேட்பாளர்களை போடவில்லை.

அதன் அடிப்படையில் மன்னார் நகர சபை, மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைகள் ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடுகின்றபோது இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் தேர்தல் முடிவு வந்த பிறகும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தவிசாளரை நியமிக்குமாறும், தாங்கள் உப தவிசாளரை நியமிப்பதாகவும் கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை விதித்தார்கள்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரை தமது கட்சிக்கு வழங்கும் பட்சத்தில் தாங்கள் ஏனைய சபைகளில் ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்கள்.

தொடர்ச்சியாக 3 தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் தெரிவில் முதல் 2 வருடங்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் அடுத்த 2 வருடங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்குவது என இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

மாந்தை மேற்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு அதிக ஆசனங்கள் இருக்கின்ற காரணத்தினால் எங்களுக்கு முதல் 2 வருடங்களை வழங்க கோரிக்கை விடுத்தோம். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யோசித்துவிட்டு கூறுவதாக சொன்னார்கள். ஆனால், அவர்கள் இன்று வரை எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை. குறித்த மூன்று சபைகளுக்குமான தவிசாளரை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம்.

நானாட்டான் பிரதேச சபை குறித்து கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டின் பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். எனவே மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் மக்களுக்கும் ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவும், இந்த கோரிக்கையை விடுக்கின்றோம்.

அதிக ஆசனம் பெற்ற சபைகளில் தமிழ் கட்சிகள் முன்வந்து நிபந்தனையற்ற வகையில் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தொடர்பில் 2 வருடங்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் ஏனைய 2 வருடங்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வழங்க இலங்கை தமிழ் அரசு கட்சி தயாராகவிருக்கிறது.

எனவே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தனிப்பட்ட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். மன்னார் மாவட்ட மக்களின் அரசியல் நலன் சார்ந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தயாராக இருக்கிறது. எனவே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் எங்களுடன் இணைந்து சபை அமைக்கும் விடயத்தில் முன்வருவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

Related posts

பேரினவாத ஒடுக்கு முறைகளுமே நமது நாட்டை நிம்மதி இழக்கச் செய்கின்றது

wpengine

வவுணதீவு பிரதேச செயலக வருடாந்த கலாச்சார விழா

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ளாடை அணிய தடை

wpengine