முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை கடத்தி வியாபாரம் நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற முல்லை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான சி.சிவமோகன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெண் கால்நடைகளும் வகைதொகையின்றி காடுகள் ஊடாக கடத்தப்பட்டு வெளி மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் முல்லை மாவட்டத்தில் கால்நடை அபிவிருத்தி மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கென ஒரு கால்நடை கடத்தும் மாபியா கும்பல் திட்டமிட்டு செயற்படுகிறது. இந்த கும்பல் மாடுகளை காடுகள் ஊடாக கடத்தி வவுனியா நகரத்திற்கு அப்பால் உள்ள இரட்டைபெரியகுளம் கிராமத்தின் காடுகள் ஊடாக வெளி மாவட்டங்களுக்கு கடத்துகின்றனர்.
இதுபற்றி கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் வினவிய போது, தாங்கள் முறைப்படி 2015 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு 1000 மாடுகள் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிகள் வழங்கியதாகவும், ஆனால் சட்டவிரோதமாக பெருந்தொகையான மாடுகள் கடத்தப்படுவதாகவும் கூறினர்.
இறுதியில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மேலதிகாரியூடாக அறிவுறுத்தப்படுவதாகவும், மக்களின் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.
எனவே பொதுமக்கள் மாடுகள் கடத்தல் விடயத்தில் கவனமெடுத்து பொலிஸ் நிலயங்களுக்கு அறிவிக்குமாறு முல்லை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் சி.சிவமோகன் தெரிவித்தார்.