மலேசியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய பழைய பல்கலைக்கழகமான கோலாலம்பூர் பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையிலான உடன்பாடு இன்று காலை கோலாலம்பூர் பல்கலைக்கழக தலைமையகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு கெம்பஸினுடைய பல்வேறு பட்ட துறைகளுக்கு மலேசியாவில் உள்ள பிரபல்யமான பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பையும்,ஆலோசனைகளையும்,
மருத்துவத்துறை மற்றும் தொழில்நுட்பம், தொடர்புசாதனம் போன்ற துறைகளிலே மிகப் பிரபல்யம் பெற்ற சுமார் 37000 மாணவர்களை கொண்ட இப்பல்கலைக்கழகம் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டது.குறிப்பாக கப்பல் துறை, கப்பல் கட்டுவது, கடல் மார்க்கம் சம்பந்தப்பட்ட துறைக, விமான பொறியியல் துறை, மருத்துவ துறை போன்ற துறைகளில் இப் பல்கலைக்கழகம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆகவே மருத்துவம் மற்றும் ஊடகத்துறை போன்ற துறைகளுக்கான பட்டப்படிப்பு, மேற்படிப்பு, ஆய்வு போன்றவற்றிற்கான உதவிகளை மட்டக்களப்பு கெம்பஸுக்கு வழங்க அந்த பல்கலைக்கழகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அவர்களுடைய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அனுப்புவதோடு மட்டக்களப்பு கெம்பஸை கட்டியெழுப்ப சகல உதவிகளையும் செய்வதாகவும் உடன்பட்டுள்ளது. அது தொடர்பான உடன்படிக்கையே இன்று காலை இடம்பெற்றது. கோலாலம்பூர் பல்கலைக்கழகம் சார்பாக அதன் தலைவர் பேராசிரியர் டொக்டர் மஸாலிகா முகம்மட் அவர்களும் அதன் பிரதித் தலைவர் முகம்மட் ஹிஸாம் பின் சி அப்துல் கனி அவர்களும் மட்டக்களப்பு கெம்பஸின் சார்பாக அதன் தலைவர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி S.M. இஸ்மாயில் அவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன் மூலம் மட்டக்களப்பு கெம்பஸ் பல்வேறு பட்ட துறைகளில் முன்னேறவும் இவ்வுடன்படிக்கை வழி சமைக்கும் என அதன் தலைவர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இந் நிகழ்வில் கோலாலம்பூர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மட்டக்களப்பு கெம்பஸின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.