Breaking
Tue. May 7th, 2024

(சுஐப் எம் காசிம்)

கடந்த அரசாங்க காலத்தில் நான் ஊழல்களை மேற்கொண்டிருந்தால் ஒரு போதுமே மகிந்த அரசிலிருந்து வெளியேறி இருக்க மாட்டேனென்றும் என் மீது காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளே அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆணித்தரமாக தெரிவித்தார்.

நேத்ரா தொலைக்காட்சியில் வெளிச்சம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், தற்கால அரசியல் தொடர்பாகவும் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

ஐ தே க வின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இங்கு அமைச்சர் தெரிவித்ததாவது,

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ரிஷாட், விசாரணைக்குட்படுத்தப்படுவார், கைது செய்யப்படுவார் என்று சில இணைய தளங்களும் பத்திரிகைகளும் தற்போது அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இவ்வாறான கட்டுக்கதைகள் இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. கடந்த தேர்தல் காலத்தில் இருந்தே குறிப்பிட்ட ஒரு சிலரால் எனக்கெதிராக பரப்பப்பட்டு வரும் வதந்தியாகும்.

முஸ்லிம் சமூகக்கட்சியொன்றில் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் சோடிக்கப்பட்ட போலியான குற்றச்சாட்டுக்களை கோவைப்படுத்தி அந்த ஆவணக்கோப்புக்களை குற்றப்புலனாய்வினரிடம் முன்னர் ஒரு முறை சமர்ப்பித்திருந்தார். ஊடகங்களும் இதனை பரபரப்பு செய்தியாக வெளியிட்டன.

பொதுத்தேர்தலுக்கு ஒரு வாரங்களுக்கு முன்னர் இதே பேர்வழி முஸ்லிம் கட்சியொன்றில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவருடன் இணைந்து கொழும்பிலே எனக்கெதிராக ஊடகவியலாளார் மாநாடொன்றை நடத்தினார். முன்னர் காட்டிய அதே குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பைல்களை ஊடகவியலாளர்களிடம் காட்டி தனது காழ்ப்புணர்வை மீண்டும் காட்டினார். தேர்தல் காலங்களிலும் அந்தக்கட்சி மேடைகளில் ஏறி அதே நபர் என்னை தாருமாறாக தூற்றினார்.

கேவலம் என்னவென்றால் குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடாத்துவதாக கூறும் ஒரு கட்சி முஸ்லிம் ஒருவரை பழி வாங்குவதற்கு இவ்வாறு செயற்படுவது தான் வேதனையானது.

என்னைப் பொறுத்த வரையில் நான் இறைவனுக்குப் பயந்தவன். ஐந்து நேரம் தொழுபவன். எனது கை சுத்தமானது. நான் இற்றைவரை தவறான விதத்தில் சொத்துச் சேர்க்கவுமில்லை. ஊழல் புரியவுமில்லை.

ஓர் அரசியல்வாதி வியாபாரம் செய்யக்கூடதென்று எங்குமே இல்லை. இஸ்லாம் வியாபரத்தை விரும்புகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இற்றைவரையில் என்னை எவரும் விசாரணைக்கு அழைக்கவுமில்லை எனது ஆதரவாளர்கள், அபிமானிகள் இதைப்பற்றி அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மேலும் தெரிவித்தார்,

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *