அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கு திட்டமிடுகிறது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
மேலும் கொலைக்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடங்களை அறிந்திருந்தும் அவர்கள் கைது செய்யப்படாமையானது அரசாங்கத்துக்கு இவர்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது என்பதை காண்பிப்பதாகவும் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. அரசாங்கம் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக, மின்கட்டணத்தை அதிகரித்து நாட்டிலுள்ள அனைவரிடமும் தண்டப்பணம் அறவிடுவதற்கும் அனைவரிடமிருந்தும் மறைமுக வரியை அறிவிடுவதற்கும் திட்டமிடுகிறது.
நாணய நிதியத்தின் நியாயமற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கு முன்னர் பொது மக்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மின்கட்டணத்தை குறைக்க முடிந்தது. நாமும் அதற்காக போராடினோம்.
எனவே மீண்டும் நியாயமற்ற முறையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டால், நாம் சட்ட ரீதியாக அது குறித்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி அந்த முயற்சியை தோற்கடிப்போம். நாட்டு பிரஜைகளுக்கு நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும். மாறாக அது வரி அறவிடுவதற்கான மறைமுக முறைமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
குறிப்பாக சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்திகளை மின் கட்டமைப்பில் இணைத்து அதன் தொழிநுட்ப கூறுகளை மேம்படுத்தி குறைந்த விலையில் மின்சாரத்தை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அரசாங்கம் பொறுப்பாகும். அந்த பொறுப்புக்களை தட்டிக்கழித்து குரங்களைப் பற்றி பேசிக் கொண்டு, மின்சக்தி துறையை கேலிக்குள்ளாக்கி முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அவ்வாறானதொரு சதித்திட்டம் இடம்பெறுவதை நாம் அறிவோம். அதனை நாம் தோற்கடிப்போம். இன்று நாட்டில் முன்னாள் பொலிஸ்மா அதிபரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளமை வெட்கத்துக்குரிய விடயமாகும். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல முன்னாள் பொலிஸ்மா அதிபர் இருக்குமிடத்தையும், கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான செவ்வந்தி என்ற பெண் இருக்குமிடத்தையும் நாம் அறிவோம் எனத் தெரிவித்துள்ளார்.
அவர்களை நாம் கைது செய்வோம் என்றும் அவர் கூறினார். சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருக்கும் இடம் தெரிந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு வலியுறுத்துகின்றோம். அவ்வாறின்றி அவர்கள் உடனடியாக கைது செய்யப்படவில்லை எனில் அவர்களுடன் அரசாங்கத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பிருக்கிறது. கொலைக்குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு அவர்களை கைது செய்யாவிட்டால் அது பாரிய தவறாகும் என்றார்.