யாழ் மாவட்டத்தில் கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (06) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்மக்கழிவுகளை தரம்பிரித்து வழங்குவதற்குரிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு வழங்கி குறித்த கால அவகாசத்துடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு இந்த திட்டத்தினை இறுக்கமாக பின்பற்றுமாறும் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் இக் கலந்துரையாடலில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விழாக்களின் போது ஒலிபெருக்கி மூலமான ஒலி வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் வழிபாட்டுத்தலங்களிலும் ஏனைய நிகழ்வுகளிலும் ஒலிபெருக்கிகள் குறித்த எல்லைக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை மீறும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் போது பொதுமக்கள் அது தொடர்பாக கிராம அலுவலர்கள் ,பிரதேச செயலாளர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரியப்படுத்த வேண்டுமெனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர்கள் நேரடியாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தெரிவிப்பதோடு அவர்கள் அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் வழங்கியதோடு இதற்கு மேலதிகமாக பொதுமக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ்அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக் கூட்டத்தில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.