ரமழான் காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறாது என நினைக்கிறேன். அதேபோன்று பரீட்சை காலத்திலும் நோன்பு காலத்திலும் தேர்தல் இடம்பெற்ற வரலாறு எமது நாட்டில் இருக்கிறது என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி அதிகாரசபைகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலை கடந்த அரசாங்கம் திட்டமிட்டு பிற்படுத்தி வந்தது. அன்று ஜனாதிபதியின் கட்சியும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வந்து, தேர்தல் பிற்படுத்தப்படவும் இல்லை, பிற்படுத்துவதற்கு தேர்தலும் இல்லை என்றே தெரிவித்தார்.
இந்த தேர்தலை நடத்தாமல் பிற்படுத்தியதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் தேர்தலை நடத்துவதற்காக நீதிமன்ற உதவியை நாடிச்சென்றன.எமது நாட்டின் வரலாற்றில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக தேர்தலை பிற்படுத்தி வந்திருக்கிறது அல்லது தேர்தலை கட்டம் கட்டமாக நடத்திய வரலாறு இருக்கிறது.
அன்று உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்பு இல்லாமல் போனபோது எதிர்க்கட்சிகள் அதற்கு எதிராக ஊடகங்களுக்கு முன்னால் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. ஆனால் அன்று தனது தலைவர் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது அதற்கு எதிராக குரல்கொடுக்காமல் இருந்தவர்கள் இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர்.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ரமழான் மாதத்தில் நடத்தப்போவதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ரமழான் மாதம் இடம்பெறாது. அதற்கு பின்னரே இடம்பெறும் என நினைக்கிறேன். ஆனால் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி ரமழான் நோன்பு 8இல் நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று பரீட்சை காலத்தில் தேர்தலை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கடந்த காலங்களில் பரீட்சை இடம்பெறும் காலத்திலும் தங்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள தேர்தலை நடத்திய வரலாறு இருக்கிறது.
மேலும் இந்த அரசாங்கம் 6 மாதங்களில் தோல்வியடையும் என சிலர் தெரிவித்தனர். அடுத்த மாதமாகும்போது அரசாங்கத்துக்கு 6மாதமாகிறது. அதனால் அடுத்த தேர்தலில் முடியுமானால் எங்களை தோற்கடித்து காட்டுங்கள். அதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம் என்றார்.