(எம்.ஐ.முபாறக்)
வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமை தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளானதாகவும் அந்த மாகாண மக்களின் அதிருப்திக்கு உள்ளானதாகவுமே இருந்து வருகின்றது.பிரச்சினை ஒன்றைத் தீர்க்கப் போய் மேலதிக பிரச்சினை ஒன்று கிளப்பப்பட்டதாகவே இந்த மாகாண சபை முறைமை பார்க்கப்படுகின்றது.
தாங்கள் எதிர்பார்த்த அதிகாரங்களை இந்த மாகாண சபை முறைமை தரவில்லை என்று கூறி தமிழர்கள் இதை எதிர்க்கின்றார்கள்.இந்த முறைமை மத்திய அரசுக்கு-நாட்டு மக்களுக்குத் தேவையற்ற செலவைச் சுமத்துகின்றது எனக் கூறி மறுபுறம்,ஜே.வி.பி போன்றவர்களும் எதிர்க்கின்றனர்.
ஆக,மொத்தத்தில் இந்த மாகாண சபை முறைமை அதிக எதிர்ப்புக்களை சந்தித்து வரும் ஓர் ஆட்சி முறையாகவே இருந்து வருகின்றது.இந்த முறைமை உருவாக்கப்பட்டபோதே புலிகள் அதை எதிர்த்தனர்.அதன் விளைவாகத்தான் இணைந்த வடக்கு-கிழக்கின் முதல் முதல்வர் வரதராஜ பெருமாள் அதைவிட்டுவிட்டு இந்தியா சென்றார்.
அதன் பிறகு வடக்கு-கிழக்கு மாகாண சபைகள் இயங்கவில்லை.2005 இல் வடக்கு-கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2006 இல் இடம்பெற்ற புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக அரசிடம் வீழ்ந்தது.2008இல் மஹிந்த அரசு பிரிக்கப்பட்ட கிழக்கில் முதலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்தியது.அதனைத் தொடர்ந்து வடக்கும் அரசின் கைகளுக்குள் வர 2013 இல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தியது.
2008 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாததால் மஹிந்த அரசு மிக இலகுவாக வெற்றி பெற்றது.பிள்ளையான் என்றொரு பொம்மையை மஹிந்த முதலமைச்சராக்கினார்.ஆளுனைக் கொண்டு அவரைக் கட்டுப்படுத்தினார்.
கிழக்கில் 2012 இல் இடம்பெற்ற இரண்டாவது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு 11 ஆசனங்களை வென்றது.மஹிந்த அரசு அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 14 ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களையும் வென்றன.
முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தது.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.அதன் பின் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஹாபீஸ் நஸீர் அஹமட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதுதான் கிழக்கு மாகாண சபையின் சுருக்கமான வரலாறு.யுத்தம் முடிந்து வடக்கு-கிழக்கு பூரணமான ஜனநாயகத்துக்குத் திரும்பிவிட்டது;இந்த நாடு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டுவிட்டது என்று மஹிந்த சர்வதேசத்துக்குப் படம் காட்டுவதற்காகவே இந்தத் தேர்தல்களை நடத்தினார் நடத்தினாரே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக அல்ல என்ற உண்மையை இதுவரை இடம்பெற்று வரும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இரண்டு மாகாணங்களுக்கும் இரானுவ அதிகாரிகளை மஹிந்த ஆளுநர்களாக நியமித்தார்.அவர்களைக் கொண்டு முதலமைச்சர்களையும் இரண்டு மாகாணங்களியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.முதலமைச்சர்கள் வெறும் பொம்மைகளாக்கப்பட்டனர்.எந்தவொரு அபிவிருத்தியையும் ஆளுநர்களின் அனுமதி இன்றி செய்ய முடியாத நிலை முதலமைச்சருக்கு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குச் செல்ல வேண்டிய அதிகாரங்கள் ஆளுநர்களிடம் செல்கின்றன.வடக்கு-கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியதாக சர்வதேசத்துக்குக் காட்டிக் கொண்ட மஹிந்த உண்மையில் செய்தது அதைக் குழி தோண்டிப் புதைத்ததுதான்.அவர் வேறு வகையில்-ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு வகையான பயங்கரவாதத்தையே விதைத்தார்.இதனால் மாகாண சபை முறைமை அர்த்தமற்றதாகிப் போனது.
மக்கள் பிரதிநிதிகளுக்குப் பொருத்தமான அதிகாரத்தை வழங்காத இந்த மாகாண சபை முறைமையால் வடக்கு-கிழக்கு மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் இல்லை என்பதை உணர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வைக் கேட்டுப் போராடுகின்றது.
ஆளுநர்களின் தலையீடு என்பது மஹிந்தவால் உருவாக்கப்பட்டதே என நினைத்து அந்த ஆளுநர்களை மாற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசிடம் கோரிக்கை விடுத்தது.அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டபோதிலும்,முதலமை
வடக்கு முதலமைச்சரின் உத்தரவையும் மீறி ஆளுநர் வடக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்தினார் என்று குற்றஞ்சாட்டி முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.இவ்வாறு பல சம்பவங்கள் வடக்கில் இடம்பெறுகின்றன.
கிழக்கிலும் அவ்வாறுதான்.இந்த இரண்டு மாகாணங்களின் முதலமைச்சர்களும் ஆளுநர்கள் மீது அதிருப்தியடைந்தவர்களாகவே உள்ளனர்.அந்த அதிருப்தி இப்போது வெடித்து வெளி வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.கிழக்கு முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவருக்கு ஏசிய விடயமானது ஆளுநர் மீதான முதலமைச்சரின் அதிருப்தியின் வெளிப்பாடாகவே தெரிகின்றது.
அந்தச் சம்பவத்துக்குக் காரணம் ஆளுனர்தான் என்று முதலமைச்சர் பின்பு கூறியுள்ளார்.முதலமைச்சருக்குரி
மஹிந்த அரசோ,மைத்திரி-ரணில் அரசோ,எந்த அரசும் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதை விரும்பவில்லை.எப்போதும் அவை மத்திய அரசின் பார்வைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும்.
மத்திய அரசு தொடர்ந்தும் இவ்வாறானதொரு மனோநிலையில் இருக்குமாக இருந்தால் அதிகாரப் பகிர்வு என்பது எப்படி சாத்தியப்படும்?அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்துவிட்டு இப்போது உள்ளதுபோன்று அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு-அதற்காக அரசு ஒரு பிரதிநிதியை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காது என்று கூற முடியாது.
மத்திய அரசு வழங்கும் அதிகாரப் பகிர்வு எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை இந்த மாகாண சபை முறைமையை வைத்து விளங்கிக்கொள்ளலாம்.கோரப்படும் அதிகாரப் பகிர்வு என்பது மாகாண சபை முறைமையை விடவும் அதிகாமானது.குறைவான மாகாண சபை அதிகாரங்களை கொடுப்பதற்கே இவ்வளவு கஷ்டம் என்றால் அதிகளவான அதிகாரப் பகிர்வை வழங்குவது எப்படி சாத்தியப்படும்?