(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)
கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அஹமத் அவர்கள் கடற்படை அதிகாரியை சம்பூரில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வு ஒன்றில் அவமானப்படுத்தியுள்ளார். என்பதுதான் இந்த வாரம் அரசியலில் பேசுபொருளாக உள்ளது. இதனை போற்றியும், தூற்றியும் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தினாலும், இதனைவிட பாரிய விடயங்கள் சந்திக்கு வராமல் இருக்கின்ற நிலையில், இந்த விடயத்தினை ஊதி பெருப்பித்து பூதாகரமாக்கி தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக அமைத்துக்கொடுத்த பெருமை எமது ஊடகவியலாளர்களையே சாரும்.
முதலமைச்சர் ஒரு முஸ்லிம் என்பதனைவிட அவர் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர் என்பதனால், இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்ததுபோல், முதலமைச்சரின் அரசியல் எதிரிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து யதார்த்தத்துக்கு அப்பால் பேரினவாதிகளுக்கு பலம் சேர்க்கும் விதத்தில் முதலமைச்சர் செய்தது தவறு என்று கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
அடிமைத்தனத்துக்கு பழக்கப்பட்டு குட்ட குட்ட குனிந்து செல்கின்றவர்கள் மட்டுமே முதலமைச்சர் நாகரீகமாக நடந்துகொள்ளவில்லை என்கின்றார்கள். ஆனால் முற்போக்கு சிந்தனையும் போர்க்குணமும் கொண்ட எவரும் எந்த இடத்திலும் தங்களது கொள்கையினை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பாடசாலை மாணவர்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பார்வையாளர்களாக இருக்கத்தக்கதாக நாட்டின் அதியுயர் சபயான பாராளுமன்றத்தில் நடந்திராத அநாகரீகம் இங்கு நடந்தேறிவிடவில்லை என்பதனையிட்டு நாங்கள் ஆறுதலடைய வேண்டும்.
அன்றய வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அவர்கள் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு, இந்திய படையினர்களுடன் நாட்டைவிட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து, வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டிலிருந்து ஆளுநரின் ஆளுகைக்கு கீழ் நிறுவகிக்கப்பட்டது.
தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் பரவலாக செறிந்து வாழும் வடகிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழரையோ, அல்லது ஒரு முஸ்லிமையோ ஆளுநராக இதுவரையில் நியமித்ததில்லை. மாறாக ஒய்வு பெற்ற சிங்கள படை உயர் அதிகாரிகளே ஆளுநராக நியமிக்கப்பட்டதுதான் வரலாறு.
நீதிமன்ற தீர்ப்புக்கமய 2007 இல் இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டு, தனித்தனியே ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். பின்பு கிழக்கு மாகாணத்துக்கு 2008 இல் தேர்தல் நடாத்தப்பட்டது. அதில் சிங்கள அரசாங்கத்தின் பொம்மையாக செயற்படக்கூடியர் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். பின்பு சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக 2013 இல் வட மாகாணசபை தேர்தலை விருப்பமின்றி அரசாங்கம் நடாத்தியது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பெற்றி ஆட்சி செய்து வருகின்றது.
இங்கே விடயம் என்னவென்றால், மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பெயரளவில் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியுமே தவிர, போதிய அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எந்தவொரு பணியினையும் ஆளுநரின் அனுமதி பெற்றே செய்யவேண்டிய நிலை மாகாணசபையில் காணப்படுகின்றது. இதன் நீண்டகால மனஉளைச்சளின் வெளிப்பாடுதான் கிழக்கு முதலமைச்சரின் கொந்தளிப்பாகும். இம்மாகாண சபை மூலம் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பதனாலேயே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை பிரபாகரன் ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளவில்லை.
மாகாணசபையின் குறைந்தளவு அதிகாரத்தினையும் புடுங்கி எடுப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயன்றபோது, அமைச்சரவையில் சிறுபான்மை இனத்தினை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா, அதாஉல்லா, ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள். அப்போது தன்னந்தனியே மகிந்த ராஜபக்சவினை எதிர்த்து அமைச்சரவையில் வாதிட்டு தடுத்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் என்பதனை அன்றைய பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிட்டதுடன், அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராட்டியும் இருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிருவாகத்தில் ஆளுநரின் தலையீடுகள் அதிகமாக காணப்படுவதனால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ்விரு மாகாண முதலைமைச்சர்களும், அமைச்சர்களும் ஆளுநருடன் முரண்படாத சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை.
தங்களுக்கு பொம்மையாக செயற்படக்கூடியவர்கள் என்று நியமிக்கப்பட்ட கிழக்கு மாகான முன்னாள் முதலமைச்சர்களான பிள்ளையான், நஜீப் ஏ மஜீத் போன்றவர்கள்கூட, ஆளுநரின் தேவையற்ற தலையீடுகள் காரணமாக எந்தவொரு அதிகாரத்தினையும் தங்களால் பிரயோகிக்க முடிவதில்லை என்பதனை பகிரங்கமாக கூறி, பலவிடயங்களில் முரண்பட்டு வந்தார்கள்.
ஆளுநர் அதிகாரம் செலுத்துவது ஒருபுறமிருக்க, படையினர்களின் கெடுபிடிகளும், தலையீடுகளும் பாரிய ஒரு தலையிடியாக உள்ளது. இது கிழக்கு மாகாணத்தினை விட வடமாகாணத்திலேயே அதிகமாக காணப்படுகின்றது. அங்கு சிவில் நிருவாகங்களில்கூட படையினர்களிடம் அனுமதி பெற்றும், அவர்களது மேற்பார்வையிலும் இன்னும் நடைபெற்றுவருவது வடமாகான சபைக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது.
ஆனாலும் இவ்வாறான படையினர்களின் தலையீடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும், சத்தியாக்கிரகங்களும், பிரேரணைகள் நிறைவேற்றியும், பாராளுமன்றத்திலும் தங்களது எதிர்ப்பினை த.தே.கூ மேற்கொண்டார்களே தவிரே, நேரடியாக படைத்தளபதிகளிடம் தங்களது அதிகாரத்தில் குறுக்கிட வேண்டாம் என்று ஒருபொழுதும் வாதிட்டதில்லை. அதனால்தான் என்னவோ படையினர்கள் தங்களது தலையீடுகளை அங்கு இன்னும் நிறுத்தவில்லை.
கிழக்கு மாகாணத்தில் சம்பூர் பிரதேசம் புலிகளிடமிருந்து 2006 இல் மீட்கப்பட்டதன்பின்பு தமிழ், முஸ்லிம் மக்களின் குடியிருப்பு நிலங்கள், வயல் நிலங்கள் என்பன படையினர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. இதில் தனியார் மற்றும் அரச நிலங்கள் பல அண்மையில் கிழக்கு மாகாணசபையின் முயற்சியினால் படையினர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவர்களது ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்பதன் வெளிப்பாடே கடற்படையினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற சம்பூர் பாடசாலை நிகழ்வாகும்.
யுத்தப்பிரதேசம் ஒன்றில் சிவில் நிருவாகத்தில் இராணுவத்தினர் தலையீடு செய்வது ஒரு சாதாரண விடயமாகும். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை தாண்டி, முழுக்க முழுக்க சிவில் நிருவாகம் நிலவுகின்ற பிரதேசமொன்றில் சீருடை தரித்த படையினருக்கு என்ன வேலை? மாகாணசபைக்கு உற்பட்ட பாடசாலை ஒன்றில் விழா நடாத்துவதற்கு படையினருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினால் அங்கு கல்வி அமைச்சு எதற்கு இருக்கின்றது? கல்வி அமைச்சு செய்யவேண்டிய வேலயை படையினர்களிடம் பொறுப்பு கொடுத்தது யாருடைய தவறு? என்று கேள்விகளை எழுப்ப சிலருக்கு மனமில்லாமல் இருக்கின்றது.
இங்கே ஒரு விடயத்தினை நாங்கள் கவனிக்க வேண்டும். அதாவது முதலமைச்சர் கடற்படை அதிகாரியை மட்டும் திட்டவில்லை. கூடவே தன்னை அதிகாரம் செலுத்துகின்ற ஆளுனருடனும் கடிந்துகொண்டார். இதன் பிரதிபலிப்புத்தான் பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கையாகும். அதாவது படையினர்களின் முகாம்களுக்கு முதலமைச்சர் செல்லக்கூடாது என்றும், அதுபோல் எந்தவொரு முதலமைச்சரின் நிகழ்வுகளிலும் படையினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை வெளியிடப்பட்டதானது விழுந்தும் மீசையில் மண் படவில்லை என்பது போல இருக்கின்றது.
ஒரு முதலமைச்சர் அழைப்பு இன்றி எந்தவொரு படையினர்களின் முகாம்களுக்கும் செல்லுவதில்லை. அப்படியான ஒரு தேவையும் அவருக்கு ஏற்படுவதுமில்லை. ஆனால் படையினர்கல்தான் தேவை இல்லாத விடயங்களில் அதிகாரம் செலுத்த முற்படுவதும், பிரச்சனைகளை உண்டாக்குவதுமாகும்.
இவ்வாறு படையினர்கள் தேவையில்லாத தலையீடுகளை சிவில் நிருவாகத்தில் திணிக்கின்ற சந்தர்ப்பங்களில் வடமாகானசபையை போன்று பிரேரணைகளையும், கண்டன தீர்மானங்களையும் கிழக்கு மாகானசபயிலும் நிறைவேற்றி இருந்தால் இன்னும் தீர்க்கமான ஓர் முடிவு இங்கும் இல்லாதிருந்திருக்கும்.
எனவேதான் கிழக்குமாகாண முதலமைச்சரின் அதிரடி கொந்தளிப்பு காரணமாக சிவில் நிருவாகங்களில் படையினர்கள் இனிமேல் தலையிடமாட்டார்கள் என்ற வரலாற்று முக்கியத்துவமிக்க முடிவு ஒன்று படைதரப்பினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது எத்தனையோ போராட்டங்கள் நடாத்திய வடமாகான சபைக்கு கிடைக்காதது கிழக்கு மாகாணசபைக்கு கிடைத்ததானது ஓர் பாரிய வெற்றியாகும். இதனைத்தான் கூறுவது கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமென்று. முதலமைச்சரின் கலகம்தான் கிழக்கு மாகாணசபையின் கேள்விக்குற்படுத்தப்பட்ட அதிகாரத்துக்கு ஒரு நியாயத்தினை பெற்று கொடுத்திருக்கின்றது.