வடக்கு காணி பிணக்குகளை தீர்க்க மத்தியஸ்த்த சபை வடக்கில் காணிப் பிணக்குகளை தீர்க்கும் நோக்கிலான மத்தியஸ்த்த சபை உருவாக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த சபை ஆரம்பித்து
வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விஜயதாஸ, இலங்கையின் ஆதன சட்டமானது வேறு எந்த நாடுகளையும் விட மிகவும் முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறான சொத்துக்கள் சம்மந்தமான சட்டங்கள் இல்லை. இலங்கையில் நடைமுறையில் உள்ளது ரோமன் டச் சட்டமாகும். இலங்கையில் ஒல்லாந்தர்கள் கரையோர பிரதேசங்களை ஆட்சி செய்த போது, அவர்களுடைய சட்ட முறைகள் இலங்கையின்
சட்ட முறைக்குள் உள்ளீர்க்கப்பட்டன. நூற்றாண்டுகள் கடந்த போதும், தற்போது ஆதன சட்டம் ரோமன் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
இதனைத் தவிர, உள்ளுர் மட்டத்திலும் பல சட்டங்கள் உள்ளன. தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தேச வழமை சட்டம் நடைமுறையில் இருக்கிறது. கண்டியச் சட்டம் என்ற சட்டம் கண்டிய சிங்களவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்குவா என்ற சட்டம் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே அசையா சொத்துக்களை பொறுத்தவரையில் இலங்கையில் நான்கு வகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. எனினும் அனைத்து வகையான சட்டங்களும் ரோமன் டச் சட்டத்தை இணைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அசையா ஆதனங்களின்
உரிமையாளர்கள் தொடர்பில் மூன்று தேவைகள் கோரப்படுகின்றன.
ஆல்ஜுஸ் ஒட்டெண்டி, ஜுஸ் ருவெண்டி, ஜுஸ் அபுடெண்டி ஆகியன அவையாகும். ஜுஸ் ஒட்டண்டி என்பது குறிப்பிட்ட சொத்தின் முழுமையான உரிமையாகும். ஜுஸ் ருவெண்டி என்பது அசையா சொத்தினை உரிமையினை கொண்டிருத்தல். ஜுஸ் அபுடெண்டி என்பது குறித்த சொத்தினை கைமாற்றுவதற்கான உரிமையை கொண்டிருத்தல்.
இந்த மூன்று அம்சங்களும் ஒன்றாக இணையும் போதே ஒருவர் ஒரு சொத்துக்கு உரிமையாளர் ஆகலாம் என்ற நிலை காணப்படுகிறது. காணிப்பிரச்சினைகளை நோக்குமிடத்து, உரிமையாளர் ஒருவருக்கு உறுதிபத்திரம் மற்றும் வரைபடம் இருக்குமாக இருந்தால், அந்த சொத்துக்கு உரிமையாளர் என்பது நிரூபனமாகும். துரதிஸ்ட்ட வசமாக வடக்கு கிழக்கின் 30 வருட யுத்தத்துக்கு பின்னர் பலரிடம் ஆதனங்களுக்குறிய ஆவணங்கள் இருக்கவில்லை.
எனவே இந்த விடயங்கள் சட்டத்தின் மூலமாக தீர்க்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சிலரிடம் உரிமை தொடர்பாக ஆவணங்கள் இருக்கின்றன போதும், அவர்கள் அதனை வைத்திருக்கக்கூடிய உரிமையையோ, கைமாற்றக்கூடிய உரிமையையோ கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் வேறொருவர் காணியை பலாத்காரமாக பிடித்து வைத்திருக்கும் போது, அந்த
பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதில் குழப்பம் காணப்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நாங்கள் பல வருடங்கள் கலந்துரையாடியப் போதும், ஆதனங்களின் அம்சங்களை
நிரூபிப்பதற்கான தடைகள் காணப்பட்டன. இதற்கு காரணம் எமது சட்டம் இன்னமும் ரோமன் டச்
சட்டத்துக்கு உட்பட்டே இருப்பதாகும்.
இந்த நிலையில் போரின் போது தாம் கைவிட்ட சொத்துக்கள் 10 வருடங்கள் ஆனப்போதும் அதன்
உரிமையை உண்மையான உரிமையாளர் பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட சட்டம் இந்த மாதம் ஆறாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சட்டம் இரண்டு வருடங்கள் மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்பதால், அதிகாரிகளும் ஊடகங்களும் இந்த விடயத்தை பொது மக்களுக்கு எடுத்துச் சென்று
உண்மையான உரிமையாளர்கள் தமது ஆதன உரிமைகளைப் பெறுவதற்கு வழி சமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையின் காணிச் சட்டப்படி 10 வருடங்கள் அத்துமீறியும் கூட ஒருவர் ஆதனம் ஒன்றை கையகப்படுத்தி வைத்திருந்தால், அந்த ஆதனம் 10 வருடங்களின் பின்னர் குறித்தவருக்கு சொந்தமாகும். எனினும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி இந்த 10 வருட காலம் அல்லது அதற்கு மேலதிகமாக உண்மையான உரிமையாளர்களை தவிர்த்து
மாற்றொருவர் சொத்து ஒன்றை கையகப்படுத்தி வைத்திருந்தால் கூட, அதனை உண்மையான
உரிமையாளர் பெற்றுக் கொள்ள முடியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டே இன்று காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்காக மத்தியஸ்த்த சபை ஆரம்பித்து வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோன்று தொழில் கொள்வோர் மற்றும்
பணியாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தொழில் தீர்ப்பாயம் ஒன்றையும் இன்று திறந்து வைத்துள்ளதாக அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.