நாங்கள் யாரையும் அரசியல் ரீதியாக பழிவாங்க விரும்பவில்லை. நாங்கள் யோஷித ராஜபக்சவைக் கைது செய்தபோது, சமூக ஊடகங்களில் ஏராளமான பொய்யான கதைகள் உருவாக்கப்பட்டன என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சட்ட மா அதிபர் கூறுவது போல் ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு, அவர் முதலில் சந்தேகநபராக பெயரிடப்பட வேண்டும்.
ஒருவரைக் கைது செய்யாமல் சந்தேக நபராகப் பெயரிட முடியாது. யோஷித ராஜபக்ச தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அதுதான்.
ஒருவருக்குப் பிணை வழங்கப்பட்டதால், குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்டார் எனக் கூற முடியாது. ஆனால் நமது மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த அறிவு இல்லாததால் ஒருவர் பிணையில் வெளிவரும் போது அவர்கள் வழக்கில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டதாக நினைக்கின்றார்கள். அதனால்தான் எம்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். இதில் எமது தலையீடுகள் எதுவும் இருக்காது. ஆனால் இவற்றை அரசியல் பழிவாங்கல் என்று காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கல் அல்ல.
சட்டச் செயற்பாடுகளில் நாம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிப்பதில்லை. கடந்த காலங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றவர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் எவ்வாறு நடந்து கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய எந்தத் தேவையும் இல்லை.
விசாரணைகளில் யாராவது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து தொடர்புடைய சட்ட நடவடிக்கை எடுப்பது சட்டமா அதிபரின் வேலை என குறிப்பிட்டுள்ளார்.