(செட்டிகுளம் சர்ஜான்)
நாட்டில் தற்பொழுது முக்கியமான சில பிரச்சனைகள் தொடர்பாக இனவாத ஊடகங்கள் தமிழ். சிங்கள. முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசலை ஏற்ப்படுத்தும் வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
அதில் ஒரு முக்கிய விடையமாக அண்மையில் திருகோணமலை சாம்பூர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கடற்படை பொறுப்பதிகாரி ஒருவரை மக்கள் மத்தியில் வைத்து திட்டிய சம்பவம் தொடர்பான செய்தியே இப்பொழுது இனவாத ஊடகங்களுக்கு ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
கிழக்கு முதல்வர் செய்தது சரியா? தவறா? என்று வாதிடுவதை விட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம்களின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர் றவுப் ஹகீம் என்னதான் செய்கின்றார் என கட்சின் உள்ளமட்டத்திளிருந்தும் வெளியிலிருக்கும் கட்சியின் ஆதரவாளர்களும் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பாக பலரும் பலவாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதில் சிலர் பதவி விலகவேண்டுமென்றும் கோஷமிடுகின்றனர். இவ்வாறு கோஷமிடுகின்றவர்களில் சிலர் சட்டத்தையும் நாட்டையும் நேசிக்கின்றவர்கள் என்றாலும் இந்த பிரச்சினையை அடிப்படையாக வைத்து அரசியல் லாபம் தேடுபவர்களே பலர் என்பதும் மறைக்க முடியாத உண்மையாகும்.
முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தொடர்பில் இவ்வாறான கருத்துக்கள் இதுவரை பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
* ஹாபிஸ் நஸீர் இற்கு தடை உத்தரவு
மிகவும் வெறுக்கத்தக விதத்திலான நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கு கடற், விமான மற்றும் இராணுவப் படைகளின் முகாம்களுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அண்மையில் திருகோணமலையில், சம்பூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற வைபவத்தின் போது, கடற்படை அதிகாரியொருவரை மிகவும் கீழ்த்தரமான விதத்தில் திட்டியதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கின்ற எந்தவொரு வைபவங்களிலும் முப்படையினரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மாகிக்கப்படுகின்றது. சம்பூரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான அறிக்கை, கடற்படையினரால், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
*ஹாபீஸ் நஸீர் இற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வின்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் அதனை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமாகி காந்தி பூங்காவுக்கு முன்பாகச் சென்று மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகச் சென்று முடிவடைந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கடற்படை அதிகாரியை பேசியதாகக் கூறப்படும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* ஹாபிஸ் நசீர் தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் அமைதிகாப்பது ஏன்? – ஜே.வீ .பி
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கடற்படை அதிகாரியை தூற்றியமை தொடர்பில் சமூகத்தில் பலவித கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியும், பிரதமரும் அமைதிகாத்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்புக்குள்ளான கொலன்னாவ மற்றும் கடுவலை பகுதிகளில் இன்று இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
* ஹாபிஸ் நசீரின் செயற்பாடு படைவீரர்களை இழிவுபடுத்தும் செயல் – மஹிந்த
கிழக்கில் இடம்பெற்ற சம்பவம் மீளவும் இடம்பெறக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவமானது படைவீரர்களின் இழிவுபடுத்தும் செயற் திட்டத்தின் ஓர் கட்டமாகும். எந்தவொரு தரப்பு அரசியல்வாதி என்றாலும் படைவீரர்களை இவ்வாறு பேசக் கூடாது.
யாழ்ப்பாணத்தில் முகாம் ஒன்றிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்து மீறி பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சிக்கு , கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை நிகர்ப்படுத்தலாம்.
இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறாமல் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
*கடற்படை அதிகாரி மீதான பாய்ச்சல் – சி.வி. நசீர் ஆகியோரின் நிகழ்ச்சி நிரலே- தே.தே.இ
படையினரை அகௌரவப்படுத்திய கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து படையினரை வெளியேற்றும் சி.வி. நசீர் ஆகியோரின் நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரலுக்கான ஓர் அங்கமே என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர்டொக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்…
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் படையினரிடம் நடந்து கொண்ட விதம் கீழ்த்தனமானதாகும். பகிரங்கமாக உயர் படை அதிகாரிகளை அவமதித்ததுக்கு இவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு இவ் விடயத்தில் அமைதியாகவுள்ளது.
வடக்கு, கிழக்கில் படையினரை அடிமைப்படுத்துவதும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நிகழ்ச்சி நிரலை விக்கினேஸ்வரன், அஹமட் நசீர், சிவாஜிலிங்கம் போன்றோர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது.
எனவே எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
*கிழக்கு மாகாண முதலமச்சர் எனது நல்ல நண்பர் – பாதுகாப்புச் செயலாளர்
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீட் அஹமட் தனது நல்ல நண்பர் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பூர் கடற்படை அதிகாரி ஒருவரை இழிவாக பேசிய சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் நேற்றைய தினம் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்ததன் பின்னர் தாம் கிழக்கு மாகாண முதலமச்சருக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து, இது பற்றி பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் பொறுமையுடன் செயற்பட்டிருக்க வேண்டுமென தாம் முதலமைச்சரிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் திட்டப்பட்ட போதிலும் மிகுந்த ஒழுக்கத்தை கடைபிடித்த கடற்படை கப்டேன் பிரேரட்னவின் செயற்பாடு பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடா்பில் முதலமைச்சர் அஹமட் பகிரங்கமாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ மன்னிப்பு கோருவதில் எவ்வித பிழையையும் தாம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
*விக்னேஸ்வரனுக்கும், நஸீர்க்கும் ஒரு வகையான நோய் தொற்றியுள்ளது – விமல்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதிக்குப் பின்னர், ஒரு வகையான நோய் தொற்றிக் கொண்டுள்ளது’ என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவத்தார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘அழைப்பில்லாத வைபவத்துக்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்கு, கடற்படையின் உயரதிகாரியை மோசமாகத் திட்டியுள்ளார். இது, படையினரை அவமதிக்கும் செயலாகும். வடமாகாணமுதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், படையினரை, வடிகான்களைச் சுத்தப்படுத்துமாறு கோரியுள்ளார். இவையெல்லாம், மதிக்கவேண்டிய படையினரை அகௌரவப்படுத்தும் செயற்பாடாகும்.
கிழக்கு முதலமைச்சர் நடந்துகொண்ட கேவலமான செயற்பாட்டுக்காக, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன், அரசாங்கத்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்……………… …………….
மேலுள்ள தகவல்கள் யாவும் ஒரே நாளில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் தொடர்பில் வெளியான செய்திகளாகும்.
தற்பொழுது கிழக்கு முதல்வர் பல்வேறான முறையிலும் ஊடகங்களுக்கு தன்னிலையை உணர்த்துவதில் மும்முரமாக இருந்தாலும் நாட்டில் சட்டம் தன் கடைமையை செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கும் மேலாக ஊடகங்கள் இது தொடர்பிலான செய்திகளுக்கும் முன்னுரிமை வழங்குவதையும் அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலங்களில் சமூகத்திற்காக குரல் குடுத்த அமைச்சர் ரவுப் ஹகீம் ஏன் இப்பொழுது, அதுவும் இந்த விடையத்தில் ஏன் அவர் மௌனம் காக்கின்றார் என்பதுதான் சிந்திக்கத் தோன்றுகிறது.
ரவுப் ஹகீம் என்பவர் சாணக்கியம் மிக்க படித்த நல்ல அரசியல்வாதி என்றே இப்பொழுதும் வர்ணிக்கப்படுகின்றார். ஆனாலும் அவர் தன் பெயரை மழுங்கடிக்கும் நிலையில் செயர்ப்படுவதான் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகும்.
அண்மையில் நாட்டில் பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டமை யாமறிந்த உண்மை, அந்த நேரத்தில் பல அமைப்புகள், பல அரசியல் வாதிகள் பல தனவந்தர்கள் என உதவிகளை வழங்கிக்கொண்டிருந்த வேளையில் இவர் கொழும்பிலிருந்தும் மூன்று நாட்களுக்கு பின்னர் மக்களை சந்திக்கசென்றதால் மக்கள் அவர் மீது தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஆனாலும் இப்பொழுது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் கட்சியின் ஆதரவாளர்களோடு உதவிகளை வழங்குவதில் மும்முரமாக செயற்ப்பட்டு வருகின்றன. அத்துடன் ஜனாதிபதியால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளுக்கான குழுவில் ஹகீமும் காணப்படுகிறார்.
முக்கியமான பொறுப்புக்கள் என்றவுடன் அரசுக்கு முஸ்லிம்கள் சார்பில் நினைவுக்கு வருவது ஹகீம்தான் ஆனால் அவரோ அவைகளை உதாசீனம் செய்வதுபோல செயற்படுவதுதான் கவலையளிக்கிறது.
கட்சிக்குள் ஹசனலியின் பிரச்சினை அதனைத்தொடர்ந்து வெள்ளத்தில் மக்கள் கோபப்பட்டது, இப்பொழுது ஹாபிஸ் நசீரின் பிரச்ச்சினை என்று அடுக்கிக்கொண்டே போகலாம் ஆனால் எல்லா நேரத்திலும் பேச்சை விட மௌனம் சிறந்தது என்றிருந்தால் சில நேரத்தில் மக்களின் வாய்களும் திறக்கவேண்டிய நிலை ஏற்ப்படுமேன்பதே உண்மை.
ஹாபிஸ் நஸீர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆயுட்காலத்தலைவராகிப்போன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் என்பதை எப்போது ரவுப் ஹகீம் உணரப்போகிறார்? மௌனம் காக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹகீம் இனியாவது வாய் திறப்பாரா?