அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

ஆலய ஒலிபெருக்கிகளை யாருக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பயன்படுத்துங்கள்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07) மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக ஆலயங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆலயங்களில் உங்களது சமய நிகழ்வுகளின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது அயலில் உள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் உங்களது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துங்கள்.

ஆலயங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து மிகவும் தொலைவில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுகிறது. ஆகவே உங்களது ஆலயங்களில் எழுப்பப்படும் ஒலிபெருக்கி ஒலிகள் மூலம் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செயற்படுமாறு ஆலய நிர்வாகத்தினர் அல்லது தர்மகர்த்தாக்களை கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக இரவு வேளைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒலிபெருக்கி மூலம் இடையூறு ஏற்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகவே இதற்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எத்தனை டெசிமல் அளவில் ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பொலிஸாருக்கு உள்ளது. இது குறித்து எழுத்து மூலம் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் உங்களுடைய முறைப்பாடுகளை பிரதேச செயலகங்களுக்கு தெரிவிப்பதன் மூலம், பிரதேச செயலர்கள் அதனை உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்து அந்த ஒலியின் அளவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

எனவே அந்த ஒலியினால் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செய்யப்படும்போது ஏனையோருக்கும் பிரச்சினைகள் ஏற்படாது என்றார்.

Related posts

முஸ்லிம்கள் தொடர்பான போலிப் பிரச்சாரங்கள்! அமைச்சர் றிசாத் பிரதமரை சந்திக்க முடிவு

wpengine

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர்களை சந்தித்த றிஷாட்

wpengine

கொழும்பில் வாகன நெரிசலை குறைக்க பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் நிர்மானம்!

Editor