கிழக்கு முதல்வர் தன்னை பகிரங்கமாக அவமானப்படுத்திய கடற்படை அதிகாரியையும் ஆளுனரையும் அதே மேடையில் வைத்து கண்டித்தமையை உலமா கட்சி பாராட்டுகிறது.
அண்மைய கிழக்கு முதல்வர் பகிரங்க மேடையில் நடந்து கொண்ட விதம் பற்றிய கேள்விக்கு உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேலும் தெரிவித்ததாவது
உண்மையில் கிழக்க மாகாண முதலமைச்சர் என்பவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். ஆனால் ஆளுனரோ கடற்படை தளபதியோ மக்களால் தெரிவு பெற்றவர்கள் அல்ல மாறாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரச ஊழியரை விட மக்கள் பிரதிநிதிக்கே அதிக கவுரவம் உண்டு. இதனால்த்தான் பாராளுமன்றத்தில் கூட அதன் பிரதிநிதிகளுக்கு இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத தனி கவுரவம் உண்டும்.
இந்த வகையில் கிழக்கு முதல்வர் அமெரிக்க தூதுவர் முன்பாக அவமானப்படுத்தப்பட்டது என்பது முழு கிழக்கு மக்களையும் அவமானப்படுத்தியதாகவே பார்க்கிறோம். இதற்கு ஹாபிஸ் அந்த இடத்திலேயே பதில் கொடுக்காமல் விட்டிருந்தால் இந்த விடயம் கிழக்கு மக்களுக்கு வரலாற்று வடுவாக இருந்திருக்கும்.
உலமா கட்சியை பொறுத்த வரை கிழக்கு முதல்வரினதும் அவர் சார்ந்துள்ள முஸ்லிம் காங்கிரசினதும் ஏமாற்று அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அவர் மக்கள் பிரத்நிதி என்பதால் அவரின் கவுரவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
முதல்வரின் இந்த செயல் மூலம் கிழக்கை பிரிக்க பாடுபட்ட வீரரை அவமானப்படுத்தி விட்டார் என கூறுவது சிரிப்புக்கிடமானது. இந்த நாட்டில் இராணுவத்தை எதிர்த்து போராடியவர்கள் பாராளுமன்ற உறுப்பினரான போது அதே இராணுவம் அவர்களுக்கு சல்யூட் அடிப்பதை விட இது ஒன்றும் கேவலமானதல்ல.