Breaking
Sun. Nov 24th, 2024

ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் தலிபான்  இயக்கத்தின் புதிய தலைவராக முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்த முல்லா உமர் கடந்த 2013-ம் ஆண்டு இறந்ததற்கு பின்னர், அந்த இயக்கத்தின் தலைவராக முல்லா அக்தர் மன்சூர் (வயது 48) தேர்வு செய்யப்பட்டார்.

இவர் தலைவர் பொறுப்பேற்றதற்குபின் ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தீவிரமடைந்தது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசுடனான சமாதான பேச்சுவார்த்தையையும் இவர் கடுமையாக எதிர்த்து வந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள அகமது வால் என்ற இடத்தில் முல்லா அக்தர் மன்சூர் பயணம் செய்த காரை குறிவைத்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஆளில்லா விமானம் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் முல்லா அக்தர் மன்சூர் மற்றும் அவருடன் இருந்த இன்னொருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த தாக்குதலை அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் உறுதி செய்தது. முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை தலிபான் இயக்கமும் உறுதி செய்தது.

மேலும், தலிபான் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் அவசரமாக ஒன்றுகூடி அந்த இயக்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திவந்தனர்.

இந்நிலையில், முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் இருந்தபோது அவரது வலதுகரமாக செயல்பட்டுவந்த முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா என்பவரை தங்களது புதிய தலைவராக தேர்வு செய்துள்ளதாக தலிபான்களின் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற அவ்வியக்கத்தின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முல்லா ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா-வை புதிய தலைவராக நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *