நாட்டில் வாழும் சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுதந்திர தினச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது:
எமது நாடு சுதந்திரத்தை அடைவதற்கு பங்காற்றியவர்களின் வரலாற்றை எமது மக்கள் அறிந்து கொள்வது அவசியமாகும். இனம், மதம் கடந்து தேசம் என்ற வகையில் அவர்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்கள்.
இன்று அந்த நிலை இருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ள போதும், தற்போதும் எமது நாடு எதிர்கொள்ளும் பின்னடைவுகளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வது அவசியமாகும்.
பொருளாதாரம், கலாச்சாரம், சமூக இணக்கப்பாடு என்பனவற்றை முதன்மையாக கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய காலத்தில் இருப்பதாகவும், இந்த சுதந்திர தினம் அந்த செய்தியினை சொல்லி நிற்க வேண்டும்.
இலங்கையானது ஆசியாவின் முத்து என்று வர்ணிக்கப்பட்ட போதும், இந்த முத்தின் பிரகாசத்தை இழக்கச் செய்யும் செயற்பாடுகள் தொடர்ந்து ஆட்சியாளர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டதை இந்த சுதந்திர தினத்தில் மீட்டிப்பார்ப்பது பொருத்தமாகும்.
காலணித்துவ நாடாக இருந்த இந்த தேசத்தை அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமான நாடாக பிரகடனப்படுத்திய போதும், இன்னும் இந்த நாட்டில் வாழும் சமூகங்களினால் அவற்றை அனுபவிக்க முடியாமல் போனது எமது நாடு பின்னடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் 77வது சுதந்திர தினத்தில் சமூகங்களுக்கிடையிலான இணைப்பை இலக்காக கொண்டு செயல்பட வேண்டியது எம்மொழுவரின் கடமையாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தனது சுதந்திர தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.