கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சாம்பூர் பாடசாலை ஒன்றில் கடற்படை உயர் அதிகாரி ஒருவருடன் நடந்துகொண்ட விதம் சமூகத்தில் கடும் விமர்சனங்களையும் எதிர்பலைகளையும் தோற்றுவித்துள்ளன.
தனி மனிதனின் சுயகௌரவம் பொது இடத்தில் பலபேர் முன்னிலையில் கொச்சபடுத்தபட்டது தொடர்பில் சகல தரப்புக்களாலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கபட்டார் ஹாபீஸ் நசிர்
கடற்படை கட்டளையிடும் தளபதி எனும் உயர் அதிகாரி என்கின்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரை பல நூற்றுக்கணக்கான பொது மக்களின் மத்தியில் வைத்து அநாகரீகமான முறையில் திட்டியுள்ள பின்னர் அவரின் கட்டளையை ஏற்று செயற்படும் வீரர்களிடத்தில் நாளை எப்படி அவர் தலை நிமிர்ந்து நிற்கமுடியும்.
பொறுமை என்பது ஒரு மனிதனுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் இஸ்லாமிய வரலாற்றிலும், நபிகளாரின் வாழ்க்கையிலும் அது எந்தளவுக்கு பேணப்பட்டு வந்துள்ளது என்பதையும், அல் குர்ஆனை முழுதாக கற்றுத்தேர்ந்த இவரால் ஏன் ஒரு நிமிடம் உணர முடியாமல் போய்விட்டது.
அந்த அதிகாரி தவறே செய்திருந்தாலும் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கக்கூடிய ஒரு நாகரீகமான முறையிருக்கிறது.இந்த சம்பவத்தில் அந்த நாகரீகம் கிழக்கின் முதல்வரால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
நாட்டின் முப்படையை சேர்ந்தவர்களும் எமது மரியாதைக்குரியவர்கள் அவர்களை நாம் இகழ்வாக கருதி கழித்துவிட விட முடியாது..
அதிகாரத்தினதும்,பதவியினதும், கனத்த நிலையால் தன்னிலை மறந்து பொது இடத்தில் வைத்து அநாகரீகமாக நடந்த முதலமைச்சர் தன்மீது படிந்துள்ள கறையை போக்க உரிய வழியை அல்லது உரிய பரிகாரத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும்..
அதிகாரம், பதவி, பட்டம், செல்வாக்கு எதுவும் தம் கூடவே வரப்போவதில்லை என்பது முதலமைச்சருக்கு நன்கு தெரியும் ஆகவே இறைவனுக்கு பொருத்தமான ஒரு மனிதனாக அவர் மாற தன் மீது கொட்டிக்கொண்ட களங்கத்தை அவர் துடைத்தெறிய வேண்டும்.