(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)
கடந்த வெள்ளிக்கிழமை மீட்ப்புப்பணிக்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சென்றபோது வெள்ளம்ப்பிட்டியில் மக்களினால் கூச்சலிட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரசுக்கும், அதன் தலைவருக்கும் தொடர்ந்து சேறுபூசிவருகின்ற, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பிரச்சாரம் உசுப்பிவிடப்பட்டது.
ஆனால் மீட்ப்புப்பணியில் தலைவருடன் களத்திள் நின்றவன் என்ற அடிப்படையில் உண்மையில் அங்கு நடந்தது என்ன?
கொழும்புக்கு அண்டிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும், சேதமடைந்த இடங்களையும் பார்வையிட்டு மீட்புப்பணி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களுடன் அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களும் சென்றிருந்ததுடன் நிவாரணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு வெல்லம்பிட்டிய பிரதேசத்துக்கு தலைவர் ஹக்கீம் அவர்களும், போராளிகளும் சென்றிருந்தபோது, மேல்மாகாண முதலைமைச்சர் இசுறு தேவப்பிரிய அவர்களும் அவரது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது இருவரும் சந்தித்துக்கொண்டார்கள்.
தலைவர் ஹக்கீம் அவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் உள்பகுதிக்கு முஸ்லிம் காங்கிரசின் படகில் சென்றபோது, அங்கு வருகை தந்த முதலமைச்சருக்கு அவ்வாறு உள்பிரதேசங்களுக்குள் பிரவேசிப்பதற்கு படகு இருக்கவில்லை. அத்துடன் தலைவர் ஹக்கீம் அவர்கள் சென்ற படகினுள் அளவுக்கு அதிகமானவர்கள் ஏறி இருந்தார்கள். இதனால் படகு கவிழக்கூடிய சாத்தியம் அப்போது அதிகமாக காணப்பட்டிருந்தது. இதனால் மேலதிகமானவர்களை படகைவிட்டு இறங்கும்படி வெளியில் நின்றவர்கள் கூக்குரலிட்டு சத்தம்போட்டார்கள்.
அச்சந்தர்ப்பத்தில் படகு இல்லாமல் முதலைமச்சர் இசுறு தேவப்பிரியவும், அவரது ஆதரவாளர்களும் செய்வதறியாது நின்றிருந்த வேளையில், அவர்களுடன் நின்ற ஒருவர் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சம்பந்தமில்லாது வசைபாடினார். இதன்மூலம் தனது எஜமானரான முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவுக்கு தன்னை ஒரு விசுவாசியாக காட்ட முற்பட்டாரா? அல்லது அங்குள்ள வேறு அரசியல்வாதிகளினால் அவர் ஏவிவிடப்பட்டாரா? என்பது புரியாவிட்டாலும், அரசியலில் இது ஒரு சர்வ சாதாரான விடயமாகும்.
அதுமட்டுமல்லாது வெள்ளத்தினால் இவ்வளவுகாலமும் உழைத்து சேர்த்துவைத்திருந்த வீட்டு உபகரணங்கள், நகைகள், வாகனங்கள் என அனைத்தயும் இழந்து, உடுத்த உடையுடன், மாற்று உடையின்றி நிர்க்கதியான நிலையில் மக்கள் அவதிப்பட்டு இருந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வந்ததனால் தங்களது மனதில் இருந்த ஆதங்கங்கள் அனைத்தையும் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் உணர்ச்சிபொங்க பாதிக்கப்பட்ட மக்கள் கூறினார்கள்.
இந்த விடயத்தை முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக, ஊடகங்களை நம்பி அரசியல் செய்யும் சில எட்டப்பர்கள் மிகவும் தந்திரமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது மக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு காட்டியதாக ஒவ்வொரு வீடியோ காட்சிகளையும் எடிட் பண்ணி ஊடகங்களிலும், முகநூல்களிலும் பதிவிட்டுள்ளார்கள். இது முஸ்லிம் காங்கிரஸ் எதிரிகளுக்கு பழம் நழுவி பாலில் வீழ்ந்ததுபோன்று அமைந்துள்ளது.
வெல்லம்பிட்டிய என்பது முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்கு வங்கிகள் உள்ள ஒரு பிரதேசமல்ல. அங்கு துமிந்த, ஹிருனிகா பிரேமச்சந்திரன், முஜிபுர்ரஹ்மான், மரைக்கார், போன்றவர்களுக்கு செல்வாக்கு நிறைந்த இடமாகும். அத்துடன் இங்குள்ளவர்கள் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்களுக்கும், சிங்களவர்களுக்கும் வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். இப்பிரதேச மக்கள் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் காலத்திலும்கூட முஸ்லிம் காங்கிரசை ஆதரித்ததில்லை. அத்துடன் குடுக்காரர்கள் நிறைந்த இடமாகவும் இப்பிரதேசத்தின் ஒரு பகுதி காணப்படுகின்றது.
விடயம் இப்படி இருக்கும்போது மக்களை முட்டாளாக்கும் பொருட்டு, ரவுப் ஹக்கீம் சென்ற வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் ஒருவர் சத்தம்போட்டார் என்பதற்காக அங்குள்ள மக்கள் அனைவரும் கூச்சலிட்டதாகவும், ஏசியதாகவும், இதனால் முஸ்லிம் காங்கிரசை அங்குள்ள மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்டதாகவும் ஊடகங்கள் மூலமாக உண்மைக்கு மாறான பொய்ப்பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் எதனை அடைய நினைக்கின்றார்கள்.
எனவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் நேரடியாக மீட்ப்பு பணிகளில் கலந்துகொண்டதனால், எதிர்காலத்தில் அப்பிரதேச மக்களின் ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுவிடுமோ என்று கதிகலங்கி, அச்சத்தின் காரணமாக அங்குள்ள அரசியல்வாதிகளின் ஒருசில கைக்கூலிகளினால் திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர மக்களினால் அல்ல. என்பதனை பொறாமைக்கு அப்பால் யதார்த்த ரீதியாக சிந்திப்பதே சிறந்தது. அத்துடன் அந்த வீடியோ பதிவினை பார்த்தவர்கள் தங்களது பொறாமைக்கண்னை விலக்கி அறிவுக்கண்ணை திறந்து ஆழமாகவும், நடுநிலயாகவும் பார்க்கும்போது அதில் ஒன்றுமில்லை என்ற உண்மை புரியும்.
முன்னைய செய்தியுடன் தொடர்புடைய செய்தி