பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமையை அடையும் மாணவர்களில் குறைந்தது ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக இலங்கையின் உயிர்கல்வி வாய்ப்பை பரவலாக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தின்போது தெரியவந்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவர் நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசிரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவினால இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன்போதே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நுழைவுக்காக ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 532 மாணவர்கள் தகைமையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், அவர்களில் 44 ஆயிரம் பேர் வரையில் அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மிகுதி ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வரையிலான மாணவர்களில் 20,000 – 25,000 வரையிலானவர்கள் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஒரு இலட்சம் வரையிலானவர்களுக்கு பல்வேறு காரணங்களினால் உயர் கல்வி வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.