வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதற்குத் தேவையான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டி.ஆர்.எஸ். ஹபுஆராச்சிக்கு குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு களப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ. த சில்வாவும் இணைந்துகொண்டார்.
அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டிக்கொடுக்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பலவீனங்களைக் கண்டறிந்து, அரசின் வரி வருவாயை அதிகரித்து, வரி செலுத்துவோருக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வரிகளை வசூலிப்பதற்காகத் தற்பொழுது நடைமுறையில் உள்ள RAMIS கட்டமைப்புமுறைமை குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் கேட்டறிந்த குழுவின் தலைவர், இந்த முறைமை புதுப்பிக்கப்படுவதுடன், ஊழியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதும் அவசியம் என்றும் தெரிவித்தார். அத்துடன், வங்கிக் கட்டமைப்பு, இலங்கை சுங்கம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் காணி பதிவு அலுவலகம் ஆகியவற்றுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒன்றிணைக்கப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிக் கோப்புகளைத் திறப்பது தொடர்பான தரவுக் கட்டமைப்பை முறையாகப் பராமரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது உரிய தரவுகள் முறையாக சேகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான தகவல்த் தொழில்நுட்ப நிபுணர்களை நாட்டிற்குள் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டிய குழு, அரச தனியார் கூட்டாண்மையின் கீழாவது அத்தகைய துல்லியமான தரவு அமைப்புடன் கூடிய கட்டமைப்பு ஒன்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் இருப்பதாகத் தெரிவித்தது.
மேலும், வரி செலுத்துவோருக்கு கடிதம் அனுப்புவது போன்ற பாரம்பரிய முறைகளுக்கு பதிலாக, குறுந்தகவல் மூலம் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அறிவிப்பது, கையடக்கத்தொலைபேசி செயலிகளை அறிமுகப்படுத்துவது போன்ற நவீன முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
நிலையான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது, அதற்குரிய சட்ட மாற்றங்கள் உள்ளிட்ட தற்போது காணப்படும் தடைகள் தொடர்பில் குழுவிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், திணைக்களத்தின் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (KPI) தயாரிப்பதற்காக வழிவகைகள் பற்றிய குழுவுடன் ஒருங்கிணைந்து செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்யுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வளாகங்களுக்குச் சென்று அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சாதகமான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு வழிவகைகள் பற்றிய குழுவுக்குக் கிடைத்த அதிகாரத்துக்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றது.
இதன்போது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உட்பட உயர்மட்ட அதிகாரிகள், பாராளுமன்றத்தின் வழிவகைகள் குழுவின் செயலாளர் புத்திகா அபேசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் இணைந்திருந்தனர்.