மன்னாரில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் கடற்படையின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்டவேளையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களம் கடற்படையினரின் உதவியுடன் கடற்பரப்பில் திடீரென சுற்றி வளைப்பு கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தின்போது மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் மன்னார் உப்புக்குளம் , பள்ளிமுனையைச் சேர்ந்த தலா மூன்று மீனவர்கள் கொண்ட மூன்று படகுகளில் ஒன்பது மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடலட்டை பிடியில் ஈடுபட்டதாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் சட்ட நடவடிக்கைக்காக மன்னார் மாவட்ட கடற்தொழில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.