கோட்டாபய அரசாங்கம் கொண்டு வந்த தரக் குறைவான உரங்கள் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுப்பீர்? விவசாய அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும், இது இலங்கை நாணயத்தில் 1382 மில்லியன் ரூபாவாகும் என்றும், குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தரக்குறைவான உரத்துக்கான இழப்பீடாக பணத்தை மீளப் பெற முடியாது போயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம், இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சின் பொறுப்பு வாய்ந்த நபர்களது பொறுப்பின் அலட்சியத்தால் இந்தப் பணத்தைப் பெற முடியாது போனதாகவும், எனவே இப்போதாவது கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் எப்போது நடவடிக்கை எடுப்பீர்கள் என விவசாய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், நானோ நைட்ரஜன் உர கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையும் நிறைவு செய்யப்பட்டுள்ளதால் அதை சபையில் சமர்ப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
நெல் கொள்வனவிற்காக ஒரு கிலோ நெல்லுக்கு 100 ரூபா உத்தரவாத விலை தருவதாக ஜனாதிபதி கூறிய போதிலும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும், இந்நிலையில் இப்போகத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விவசாய அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.