Breaking
Fri. Nov 22nd, 2024

மோசடியான முறையில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பஸ்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையில் இருந்து மகும்புர வரை மோசடியான முறையில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி 34 பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் தொடர்பில் போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

தலா 1,200 ரூபாய் பெறுமதியான மோசடியான முறையில் அச்சிடப்பட்ட 34 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு 40,800 ரூபாய் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தமக்கு அறிவித்தவுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்கள், போலி டிக்கெட்டுகளை அச்சடித்த அச்சகம் மற்றும் அதன் வடிவமைப்பாளர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

மேலும், நேற்று (11) காலியிலிருந்து மகும்புர வரையான அதிவேக வீதியில் இயங்கும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸில் பயணச்சீட்டு இன்றி ஆறு பயணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுற்றிவளைப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸிடம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு ஊழல் மற்றும் மோசடிகளே காரணம் எனவும், டிஜிட்டல் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை, இந்த மோசடிகளை குறைக்க சோதனைகள் அதிகரிக்கப்பட்டு குற்றவாளிகள் பிடிபடுவார்கள் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

A B

By A B

Related Post