பிரதான செய்திகள்

கொழும்பில் வாகன நெரிசலை குறைக்க பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் நிர்மானம்!

தினமும் கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகன தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபையானது அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளது.

இவற்றில் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் மற்றைய இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் தனியார் நிறுவனத்தினாலும் நிர்மாணிக்கப்படும்.

கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக, நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை பகுதிகளில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.

அவற்றில், தனியார் துறையினரின் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு 02, யூனியன் பிளேஸ் பொது வாகன தரிப்பிடம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் நேற்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் 1,400 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வாகனத தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் உரிமையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படுகிறது.

இந்த எட்டு மாடி வாகன நிறுத்துமிடம் சுமார் 300 வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டது. க வாகனத தரிப்பிடத்தின் செயல்பாடு கணினிகள் மூலம் செய்யப்படுகிறது. இதில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதாந்த வருமானத்தில் பெறப்படும் வருமானத்தில் 20% நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, கொழும்பு மாவட்டத்தில் பொது வாகனத் தரிப்பிடமின்மையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அரச மற்றும் தனியார் துறையினரின் தலையீட்டுடன் இவ்வாறான நகர உள்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

கொழும்பைச் சுற்றி போதிய வாகனத் தரிப்பிட வசதிகள் இல்லாததாலும், முறையாக இயங்காததாலும் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்களின் நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவது பாரிய பிரச்சினை எனவும், இவ்வாறான நவீன தொழிநுட்ப வாகன தரிப்பிடங்களை அமைப்பது கொழும்பு நகரின் அபிவிருத்திக்கு உதவும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், இது தொடர்பான சகல செயற்பாடுகளையும் தயார்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மற்றும் அக்சஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தலைவர் சுமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

ரமலான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல்ல.

wpengine

தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் வகையிலேயே புதிய கூட்டணியை உருவாக்குகின்றோம்.

wpengine

“நாட்டு மக்களின் பொதுப் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு” சஜித்துக்கு பதிலளித்த அமைச்சர்.!

Maash