கம்பளை, உடுவெல்ல பிரதேசத்தில் அரசாங்க வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட பெரசிட்டமோல் மருந்து அளவுக்கதிகமான வழங்கப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கம்பளை உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி பகுதியை சேர்ந்த ஷியாமலி தருஷிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியிலுள்ள ஒரேயொரு கிராமிய வைத்தியசாலையான குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற பெற்றோர் வைத்தியசாலை வைத்தியர் பரிந்துரைத்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்துச் சென்ற போதிலும் சிறுமியின் நோய் குணமாகவில்லை.
இரண்டாவது மருந்திலும் குணமடையாததால் சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த கம்பளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுமிக்கு குருந்துவத்தை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளையும் பரிசோதித்துள்ளனர்.
அதன்படி, சிறுமிக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுக்கப்பட்டதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியர்கள் சிறுமியின் சுயநினைவை இழக்கச் செய்துவிட்டு மீண்டும் சுயநினைவு பெற முயன்றபோது சிறுமி உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குருந்துவத்தை வைத்தியசாலையில் மருந்துகளை வழங்க போதுமான கடதாசி பொதிகள் இல்லாமையினால், மருந்துகளை கடதாசிகளில் சுற்றி அதனுள் மருந்துகளின் அளவுகள் எழுதி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட மருந்துகளில் வைத்தியர் கடதாசியின் வௌிப்புறம் ஒரு மாத்திரை வீதம் வழங்குமாறும், மருந்து வழங்கியவர் கடதாசியின் உட்புறம் இரண்டு மாத்திரை வீதம் வழங்குமாறும் எழுதியுள்ளனர்.
எவ்வாறாயினும், பெற்றோர் கடதாசியின் உட்புறம் குறிப்பிடப்பட்டிருந்தவாறு இரண்டு மாத்திரைகள் வீதம் வழங்கி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.