இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆங்கிலக் கல்வியுடன் தகவல் தொழில்நுட்பக் கல்வியும் வழங்கப்பட வேண்டும் எனவும், இதனூடாக இந்நாட்டின் பிள்ளைகள் அறிவுத்தகமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நாட்டில் நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு இலவச சீருடைகள் மற்றும் இலவச மதிய உணவு வழங்கி அளவிட முடியாத பணியை ஆற்றிய மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 30 ஆவது நினைவு தினம் எதிர்வரும் மே 1 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதாகவும், இதனை நினைவுகூறும் விதமாக, முப்பது பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்னாரது 100 ஆவது பிறந்தநாள் அடுத்த வருடம் இடம் பெறுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதனை நினைவுகூறும் விதமாக மேலும் நூறு பாடசாலைகளில் இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம யடாலதிஸ்ஸ ஆரம்பப் பிரிவு பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் பிரபஞ்சம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் உயிர் நாடியாக கருதப்படும் சிறுவர் தலைமுறையை அறிவு,திறமை மற்றும் வசதிகளுடன் பூரணப்படுத்துவது தார்மீக பொறுப்பு என்று நம்பி அதற்கான நிலையான நோக்கை முன்நோக்காக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் பாடசாலை வகுப்பறைகளுக்கான டிஜிடல் திறை மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்புச் செய்யும் பிரிவின் 28 ஆவது கட்டமாக 924,000.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களும் இவ்வாறு ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம யடாலதிஸ்ஸ ஆரம்பப் பிரிவு பாடசாலைக்கு இன்று (08) கையளிக்கப்பட்டது.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கு முன்னர் 27 கட்டங்களில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 22,501,650.00 ரூபா பெறுமதியான வகுப்பறைகளுக்கான டிஜிடல் திரைகள் மற்றும் கணினி உபகரனங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
மேலும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக எழுபது பாடசாலைகளுக்கு 339,200,000.00 ரூபா பெறுமதியான 70 பாடசாலை பஸ் வண்டிகளும் இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.