மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக இதுவரை 57 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட திடீர் அனர்த்தப் பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் முஹமட் றியாஸ் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இடம்பெயர்ந்து பொது கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். எனவும் தெரிவித்தார்.
இதே போன்று முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சில கிராமங்கள் சற்று நீரில் மீதந்து கொண்டு உள்ளதாகவும் பிரதான நீர் நிலைகளில் உள்ள நீரை அகற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் செயற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மன்னார் – யாழ் பிரதான வீதியூடான போக்குவரத்துக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாலியாற்று பிரதான வீதியை வெள்ள நீர் மேவிப் பாய்கின்றமையினால் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட எமில்நகர், சாந்திபுரம், ஜீவநகர், சௌத்பார் ஆகிய கிராமங்கள் மழை வெள்ள நீரினால் சூழ்ந்துள்ளன.
மேலும் குறித்த வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மன்னார் நகர சபையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.