Reportபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் பிரோஸ்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணைகளில் செல்ல அனுமதித்த நீதிபதி பிரதிவாதி வெளிநாடு செல்லவும் பிணையாளர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீல் இத்தவல, சட்டத்தரணி ஹிஜாப் இஸ்புல்லா விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பை மையப்படுத்தி கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் பிரோஸ்கி பிணை தொடர்பான அறிவிப்பை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் உள்ள 3 ஆலயங்கள் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானதுடன், மேலும் நூற்றுகணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், பலர் தற்போது வரை ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியாவும் மற்றும் அவரது 4 வயதான மகள் ஆகியோர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர், 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் ஹாதியா சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர், கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஷங்ரில்லா ஹோட்டல் குண்டுவெடிப்பு தொடர்பிலான வழக்குக் கோவையின் கீழ் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.