Breaking
Mon. Nov 25th, 2024

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் குறைந்தாலும், மீனவச் சமூகத்தை பொருத்த வரையில், எரிபொருள் வழங்கல் முறைகேடுகளினால் அவர்கள் பாரிய கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் விஷேட கவனஞ்செலுத்த வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் (18) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வலுச்சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் கொண்டுவரப்பட்டுள்ள பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக, இன்று நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்குமாயின் எமக்கு மகிழ்ச்சியே.

எனினும், மீனவர்களைப் பொறுத்தவரையில், பாரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மன்னார் மாவட்டத்திலே, வங்காலை பிரதேச மீனவர்களினால் மன்னார் அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு முன்னால் (18) பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்குதலிலே பல முறைகேடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 340 ரூபாய்க்கு விற்கப்படுகின்ற மண்ணெண்ணெய், அங்குள்ள தனியார் விநியோகஸ்தர்களினால் 700 – 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் மீனவர்கள் பாரிய கஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். உத்தியோகபூர்வமாக அனுப்பப்படுகின்ற மண்ணெண்ணையை கூட மீனவர்களுக்கு வழங்காமல், வேறு ஒரு சில வியாபாரிகளுக்கு வழங்கி, அவர்கள் அதை இரண்டாம் தரமாக விற்பனை செய்வதனால், அங்குள்ள மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை அதிகமாகக் கொண்ட மன்னார் மாவட்டத்திலே, மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்குதலில் பாரிய அநியாயம் இழைக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில், விசேட கவனத்தை செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். மேலும், அரசாங்க அதிபரும் இந்த விடயத்தில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், அரசாங்க அதிபரின் தலைமையில் அதிகாரிகளை அனுப்பி, மன்னார் மாவட்ட மீனவச் சங்கங்கள் மற்றும் அதன் பிரதிநிதிகளையும் அழைத்து, எரிபொருள் வழங்களில் காணப்படுகின்ற முறைகேடுகளைக் கண்டறிந்து, அவசரமாக இந்தப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று, நாட்டில் தற்போது நிலவும் மின்வெட்டு காரணமாக, எமது கைத்தொழில் துறையில் பாரிய நஷ்டத்தினை எதிர்கொள்ள நேரிடும். இது ஏற்றுமதியிலும் பாரிய நஷ்டத்தை தோற்றுவிக்கும். இந்த மின்வெட்டு நிலை தொடர்ந்தால், பல கைத்தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மூட வேண்டிய நிலை ஏற்படும். தற்போது, நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலை காரணமாக, வட்டி, வரி வீதம் அதிகரித்துள்ளமையால், பல கைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கான ஆபத்துக்கள் தென்படுகின்றன. இதனால் இலட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே, மின்வெட்டு விடயத்தை எளிதான விடயமாகக் கருதாமல், எதிர்காலத்தில் அதனை முற்றாக நிறுத்துவதற்கான அல்லது கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு விசேடமான ஒரு திட்டத்தின் அடிப்படையில், எந்த நஷ்டமும் ஏற்படாதவாறு அவற்றை தடையின்றி இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று, வரி விடயத்திலும் கைத்தொழிற்சாலைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, வியாபார அமைச்சும் எரிசக்தி அமைச்சும் இணைந்து விசேட திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கின்றேன்.

மேலும், வவுனியா மாவட்ட விவசாயிகளுடன் நாம் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். எதிர்காலத்தில் விவசாயத்துக்கு தேவையான எரிபொருளை சரியான முறையில் வழங்குவதற்கான ஒரு திட்டத்தை விவசாயத் திணைக்களங்களின் ஊடாக செயற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வேண்டிநிற்கின்றனர். வவுனியா மட்டுமல்ல அம்பாறை, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய அனைத்து மாவட்ட விவசாயிகளினதும் கோரிக்கை இதுவே! மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு நான் விஜயம் செய்திருந்த போது, அவர்கள் விசேட வேண்டுகோளாக இதனை முன்வைத்தனர்.

அதேபோன்று, வவுனியா மாவட்ட விவசாயிகள், அண்மையிலே பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எம்மிடம் முன்வைத்தார்கள். 1970, 1977 ஆம் ஆண்டுகளில், இலங்கையின் மொத்த உளுந்து உற்பத்தியில், 40 வீதமான உளுந்தை வவுனியா மாவட்டம் மாத்திரம் வழங்கியிருக்கின்றது. ஆனால், யுத்தத்திற்கு பின்னரான அரசாங்கம் குறிப்பாக, வன்னி மாவட்டம், அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட இன்னும் பல மாவட்டங்களிலே இருந்த விவசாயக் காணிகளை எல்லாம் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு கீழ் இரவோடிரவாக வர்த்தமானிப்படுத்தியதால் (கெசட்), இன்று விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

எனவே, “விவசாயத்தை வலுப்படுத்துவோம், பஞ்சத்தைப் போக்குவோம், உற்பத்தியை அதிகரிப்போம்” என்று வெறுமனே பேசிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம், மேற்குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கீழ் கெசட் செய்யப்பட்டிருக்கின்ற விவசாய நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். விவசாயக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதன் ஊடாக மாத்திரமே, உணவு உற்பத்தியில் எழுச்சி மாற்றத்தைக் காண முடியும். இது தொடர்பில், அரசாங்கம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி, முறையான திட்டமிடலுடன் அதனை முன்னெடுக்க வேண்டும். மன்னார், வவுனியா, அம்பாறையில் வட்டமடு, பொத்துவில் போன்ற பல பிரதேசங்களிலே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்று வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு கீழ் கெசட் செய்யப்பட்டுள்ளன. அந்தக் காணிகளிலே விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக சண்டைகளும், சச்சரவுகளும், வழக்குகளும் நடந்தவண்ணமே இருக்கின்றன. இந்தக் காணிகளை விடுவிப்பதன் ஊடாக மட்டுமே, இந்த நாட்டின் பஞ்சத்தை போக்க முடியும், உற்பத்தியை பெருக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

அதேபோன்று, பாண்டியண்குளம், மல்லாவி பிரதேசத்தில், நீர் வழங்கல் திட்டத்தின் கீழ், கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடைமுறைப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி, வேறொரு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நந்தன் அவர்கள் எழுத்து மூலமாக ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தை இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன். ஒரு மாவட்டத்திற்கென ஏலவே ஒதுக்கப்பட்ட நிதியை, வேறொரு மாவட்டத்துக்கு மாற்றுவதென்பது அசாதாரணமான ஒரு செயற்பாடாகும். எனவே, மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேசத்திலே வாழ்கின்ற மக்களின் நலன்கருதி, மேற்படி திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்று, விடையத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் வேண்டிக்கொள்கின்றேன்.

அத்துடன், மண்ணெண்ணெய் வழங்கல் விடையத்தில் மன்னார் மட்டுமல்ல, முல்லைத்தீவு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று வலுச் சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *