புதிதாக பதவியேற்றுள்ள 37 இராஜாங்க அமைச்சர்களுக்கு 296 அரசாங்க வாகனங்கள், அதற்கான எரிபொருள் மற்றும் சாரதிகளை ஒதுக்க வேண்டியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, ஒவ்வொரு அமைச்சருக்கும் அந்தந்த அமைச்சுகளில் இருந்து 8 வாகனங்கள் ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நேற்று பதவியேற்ற புதிய இராஜாங்க அமைச்சர்கள் பலர் ஏற்கனவே அந்தந்த அமைச்சுக்களிடம் வாகனங்களை கோரியிருந்ததுடன், இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை காண்பித்து தமது வாகன உரிமைகள் மற்றும் அவற்றின் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சருக்கு இரண்டு வாகனங்களும், பிரத்தியேக செயலாளருக்கு ஒரு வாகனமும், தனிப்பட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் ஊடகச் செயலர் ஆகியோருக்கு உரிய வாகனங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவுகளை வழங்குமாறும் கோரியுள்ளனர்.
தமது இராஜாங்க அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவை நிராகரித்துள்ள போதிலும், இந்த வாகனங்கள் மற்றும் அது தொடர்பான அதிகப்படியான வரவுசெலவுத் தொகையை தமக்கு ஒதுக்க வேண்டாம் என எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் இதுவரை கோரவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது