மன்னார் மாவட்டத்தில் தென்பகுதி மீனவர்களின் வருகையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க கோரியும் அவர்களை புதிதாக குடியமர்த்த மேற்கொள்ளப்படும் குடியேற்றத்தை நிறுத்தகோரியும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளத்தினால் நேற்று 13.05.2016 முசலி பிரதேச செயலாளரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
இவ் மனுவை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஞானசீலன் குணசீலன் ஆகியோர் முன்னிலையில் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் ஆலம், செயலாளர் ஜஸ்டின் மற்றும் பிரதிநிதிகள் ராஜா, ஹனாப்தீன் ஆகியோர் முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.
அப்போது மேற்படி பிரச்சனைகளை 01.06.2016 இற்குள் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக மேலதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.
இதன் பின் கருத்து தெரிவித்த வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர், 1984 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த சிங்கள கிராமங்களில் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்வதில் தமக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் புதிய சிங்கள குடியேற்றங்களை உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்றும் இதனை தாம் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.