இன்று நாட்டில் அரசியல் சூதாட்டமே இடம் பெற்று வருவதாகவும், இந்த அரசியல் சூதாட்டத்தில் துரதிஷ்டவசமாக 220 இலட்சம் மக்களும் இறையாக்கப்பட்டுள்ளனர் எனவும், இங்கு மக்கள் அபிலாஷைகள் நசுக்கப்பட்டு, ஆட்சியில் இருக்கும் தரப்பு எவ்வாறோ பல்வேறு வழிகளில் மக்கள் அபிப்பிராயங்களை பல்வேறு விதமான உத்திகளைப் பிரயோகித்து நசுக்கி, அவர்களின் நோக்கங்களை சாத்தியப்படுத்திக்கொள்ளும் நிலையே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (23) நடைபெற்ற அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கம் தனது பதவியை பாதுகாத்துக்கொண்டு தனது இருப்பை தக்கவைப்பதற்காகவே சகலதையும் மேற்கொண்டு வருகின்றதே அன்றி மக்களின் நலனுக்காக அல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நாட்டில் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது முதல் அரசியலமைப்பு திருத்தம் வரை சகல துறைகளிலும் மாற்றம் வேண்டி மக்கள் போராட்டம் இடம் பெற்று வந்தாலும், இறுதியாக அமைதியான முறையில் மக்கள் நடத்திய போராட்டத்திற்கு கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகையிலிருந்து கறுப்பு கறை படிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக நடமாடும் போது, பாதிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் மனித உரிமைகள் இரக்கமற்ற முறையில் மீறப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
முழு நாடும் அரசியல் சீர்திருத்தம், மாற்றத்தை எதிர்பார்த்தாலும், மக்கள் ஆதரவு இல்லாத ஒரு நபர் வாயில் காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, ராஜபக்ஸ குடும்பத்தை பாதுகாக்கும் பாதுகாப்புப் பிரதானியாக நியமிக்கப்பட்டு, அரசியல் சூதாட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.
தேசிய மறுசீரமைப்புகளுக்கான மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இன்று (23) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
தேசிய மறுசீரமைப்புகளுக்கான முன்மொழிவுகளைப் பெறுவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது.
குறிப்பாக மறுசீரமைப்புகளுக்கான மக்கள் இயக்கம் இதற்கு முன் பல சந்தர்ப்பங்களில் கூடியுள்ளதோடு, நாட்டை கட்டியெழுப்பும் முகமாக அவர்கள் முன்வைத்த வேலைத்திட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தமது உடன்பாட்டை வெளிப்படுத்தின.
மேலும் முறையான பொறிமுறை கட்டமைப்பை ஸ்தாபிக்கும் வகையில் தேவையான வசதிகளை ஏற்ப்படுத்திக் கொடுக்கும் பங்குதாரராக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் இணை செயலகம் ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.