Breaking
Mon. Nov 25th, 2024

யானையுண்ட விளாம்பழத்தை உடைத்துப் பார்க்கும் வரைக்கும் அதன் தோற்றம் எச்சிலை ஊற வைக்கும்.உடைத்துப் பார்த்தால் பொங்கிய எச்சில் விலாசம் தெரியாது ஓடி ஒழித்து விடும்.இது போன்றுதான் பொதுவாக மு.காவின் உயர்பீடக் கூட்டமொன்று நடைபெறப்போகிறதென்றால் அதற்கு மக்களிடையே பலத்த எதிர்பார்ப்புகள் நிலவும்.அக் கூட்டம் நடைபெற்ற பின்பு உப்புச் சப்பற்ற கதை ஒன்றே அக் கூட்டத்திலிருந்து கிடைக்கப்பெறும்.அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீமிற்கும் ஹசனலிக்குமிடையில் சில முரண்பாடுகள் தோற்றம்பெற்றுள்ளன.இதன் பின்னணியில் அமைச்சர் ஹக்கீமின் தன்னிச்சையான முடிவின் பிரகாரம் மு.காவை விட்டும் இருவர் நீக்கப்பட்டிருந்தனர்.இதன் பிறகு மு.காவிற்குள் பல முரண்பாடுகள் தோற்றம்பெற்றிருந்தன.இவ் முரண்பாடுகளின் பிற்பாடு  ஏப்ரல் மாதம் பதினைந்தாம் திகதி மு.காவின் உயர்பீடக் கூட்டம் ஏற்பாடாகிருந்தது.அக் கூட்டம் கடந்த ஏப்ரல் இருபத்தாறாம் திகதிக்கு ஒத்திக்கப்பட்டு,மீண்டும் சில காரணங்களைக் கூறி மே மூன்றாம் திகதிக்கு ஒத்திவைத்து அத் தினத்தில் நடாத்தப்பட்டிருந்தது.

ஹசனலியின் பிரச்சினை,கட்சியின் உயர்பீடத்திலிருந்து இருவர் நீக்கப்பட்ட பிரச்சினை ஆகியவற்றின் பின் கூட்டப்பட்ட இவ் உயர்பீடக் கூட்டத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பிருந்தது.செய்திகளும் இதனைப் பிரதானமாக வைத்தே கூட்டப்பட்டதாக மக்களிடையே பரப்பப்பட்டிருந்தன.இக் கூட்டத்தை இரு தடவைகள் ஒத்திவைத்தமை கூட அமைச்சர் ஹக்கீம் இச் சவாலை எதிர்கொள்ள முடியாமையால் தான் என்ற ஊகங்களும் அந் நேரத்தில் வெளிவந்திருந்தன.

கடந்த மு.காவின் உயர்பீடக் கூட்டத்தில் ஹசனலி,பஷீர் சேகுதாவூத் கலந்து கொண்டதை வைத்து அவர்கள் மு.காவுடன் முரண்பாடுகளைக் களைந்து ஒன்றிணைந்ததான விம்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இவ் உயர்பீடக் கூட்டமானது இவர்களது பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டி கூட்டப்பட்டிருந்ததால் இவர்களின் வருகை மிக முக்கியமானது.இவர்கள் சமூகமளிக்காத போது அங்கு சமூகமளிப்பவர்கள் அவர்கள் நினைத்த பிரகாரம் இப் பிரச்சினையின் வடிவத்தை மாற்ற வாய்ப்புள்ளது.இது தொடர்பில் ஹசனலி தரப்பை தொடர்பு கொண்டு வினவிய போது அமைச்சர் ஹக்கீமிற்கும் இவர்களுக்குமிடையிலான பிரச்சினை இன்னும் முற்றுப் பெறவில்லை என்ற செய்தியே எனக்குக் கிடைத்தது.இக் கூட்டத்திற்கு ஹசனலி சமூகமளித்தமை ஹசனலி அணியினர் மிகப் பலமிக்கவர்களாக உள்ளமையைத் தெளிவாக்குகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூட்டப்பட்ட இக் கூட்டமானது ஹசனலியின் பதவி குறைப்பு,உயர்பீட உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டமை ஆகியவற்றை விசாரணை செய்யும் நோக்கில் அமைச்சர் ஹக்கீம் மூவர் கொண்ட குழுவை நியமித்து அப்படியே இது தொடர்பான பேச்சுக்களை மேல்கிழம்பாது இவ் விடயத்தை மிகவும் சாதூரியமாக கையாண்டுள்ளார்.எனக்குக் கிடைத்த சில தகவல்களின் பிரகாரம் இது விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் மிகப் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் விவாதங்களை அமைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுந்து கட்சியின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி விடுமென்ற காரணத்தால் தான் ஆரம்பத்திலேயே இக் குழுவை அமைத்து இவ் விடயத்தைக் கையாண்டதாக கூறுகின்றனர்.இதன் பிரகாரம் இக் குழுவினர் ஹசனலியை அணுகி பல சுற்றுப் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் அமைச்சர் ஹக்கீம் தான் சுயமாக எடுத்த முடிவை அடிப்படையாக வைத்தேயாகும்.ஹசனலியின் பதவிக் குறைப்பு விவாகாரத்தில் சில ஜில்மார் வேலைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்ற போதும் உயர்பீட உறுப்பினர்களின் அனுமதியுடனே அது அரங்கேற்றப்பட்டதான தோற்றமுள்ளது.குறித்த இரு உயர்பீட உறுப்பினர்களை நீக்கியது உயர்பீட உறுப்பினர்களுடன் சிறிதேனும் கலந்தாலோசித்தல்ல.ஒரு கட்சியை விட்டும் இரு உயர்பீட உறுப்பினர்களை நீக்குவதொன்றும் வினாக்களைத் தொடுக்க முடியாதவாறான சிறிய பிரச்சினையல்ல.அமைச்சர் ஹக்கீம் கடந்த உயர்பீடக் கூட்டத்தில் இவ்விருவரையும் தான் ஏன் கட்சியை விட்டு நீக்கினேன் என்பதற்கு தகுந்த காரணங்களை முன் வைத்திருக்க வேண்டும்.இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் மௌனியாக இருப்பது அமைச்சர் ஹக்கீமின் எதேச்சதிகாரப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.

எது எவ்வாறு இருப்பினும் இனி ஹசனலிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை.இக் குழு யாருக்குச் சார்பான பரிந்துரைகளை முன்வைத்தாலும் ஹசனலி கவலைப்படப் போவதில்லை.தற்போது ஹசனலி அணியினரின் முதற் கோரிக்கையாக குறித்த நீக்கப்பட்ட இரு உயர்பீட உறுப்பினர்களையும் மீள இணைத்தலாகவே உள்ளது.இவர்களை இணைத்தலென்பது அமைச்சர் ஹக்கீம் பிழை செய்ததாக கூவித் திரிவதாக மாறிவிடும்.தற்போது ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்க சிந்திக்கப்படுவதாகவும் ஒரு மு.கா தரப்புத் தகவல் கூறுகிறது.செயலாளர் பதவி வகிப்பவர் அரசியல் பதவிகளை வகிக்கக் கூடாது எனக் கூறிவிட்டு ஹசனலிக்கு பதவி வழங்கினால் அது அமைச்சர் ஹக்கீமிற்கு மிகவும் கேவலமாக போய்விடும்.இதனால் தான் என்னவோ இக் குழுவை வைத்து இவைகளைச் செய்யும் போது அக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சர் ஹக்கீம் பணிந்தான தோற்றத்தை ஏற்படுத்தி தனது மானத்தை சிறிது காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றாரோ தெரியவில்லை.

அமைச்சர் ஹக்கீம் குறித்த உயர்பீட உறுப்பினர்கள் இருவரையும் நீக்கியதென்பது ஹசனலிக்கு வழங்கிய முதல் அடியாகவே பலராலும் நோக்கப்பட்டது.அமைச்சர் ஹக்கீம் கடந்த தேசிய மாநாட்டிலும் அதற்கு வெளியிலும் ஹசனலியை சில இடங்களில் தாக்கியுமிருந்தார்.போருக்கு போர் முரசைக் கொட்டிவிட்டு யுத்தத்தையும் ஆரம்பித்து வழி நடாத்திச் செல்லுகையில் சமாதானத்திற்கு ஆள் நியமிப்பதன் பொருளை நான் சொல்லித் தான் நீங்கள் விளங்க வேண்டுமா?

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மு.காவிடம் விளக்கம் கோரியுள்ளதாக அறிய முடிகிறது.இவர்களின் விளக்கம் கோருகைக்கு மு.காவினரின் தாரக மந்திரமான குர்ஆன் ஹதீதை அடிப்படையாகக் கொண்டியங்கும் கட்சி என்ற கருத்தை தூக்கிப் பிடிக்கின்றனர்.இது மு.கா இதற்கு முன் குர்ஆன் ஹதீதில் இயங்கியதான பொருளை வழங்கிவிடும்.கடந்த மு.காவின் தேசிய மாநாட்டில் குமருகளின் குத்தாட்டம் நடைபெற்றது.இதுவெல்லாம் இஸ்லாமிய அடிப்படையில் சரி என்ற பொருளை வழங்கிவிடும்.எனவே,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இது விடயத்தில் மௌனம் பேணுவதே ஏற்கத்தகுந்தது.

குறிப்பு: இக் கட்டுரை நேற்று புதன் கிழமை 11-05-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துறையூர் ஏ,கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *