பொதுபலசேனா அமைப்பு அடிப்படை வாத இனவாத இயக்கமென்றும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குக் காரணமாக இருந்ததென்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறார் எனவும் இதனை முற்றாக மறுப்பதாகவும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விமல் வீரவன்ச எம்.பி கடந்த 9 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொதுபல சேனாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் முகமாக இந்த ஊடகவியலார் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞானசாரதேரர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
விமல் வீரவன்ச ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொதுபலசேனா அமைப்பு நாட்டின் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சர்வதேச நாடுகளின் உதவியுடன் சூழ்ச்சி செய்தது. நோர்வே நாட்டிலிருந்து பொதுபல சேனாவுக்கு இதற்காக பணம் கிடைத்தது. பொதுபலசேனா அமைப்பு ஒரு அடிப்படை வாத இனவாத இயக்கமாகும். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முஸ்லிம்களைத் தூரமாக்கியது. ஏகாதிபத்தியவாதிகளின் திட்டத்தை நிறைவேற்றியது என்றெல்லாம் பொய் குற்றம் சுமத்தியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு மே மாத கூட்டத்திலும் விமல் வீரவன்ச பொதுபல சேனாவுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுகளையே முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை நாம் மறுத்ததுடன் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் ஒப்புவித்தால் ஒப்புவித்து ஒரு மணித்தியாலயத்துக்குள் பொதுபலசேனா அமைப்பைக் கலைத்து விடுவதாக நாம் சவால் விட்டிருந்தோம்.
எமது சவால் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன.
ஆனால் விமல் வீரவன்ச எமது சவாலை இன்று வரை ஏற்றுக் கொள்ளாது மௌனமாகவே இருக்கிறார்.
இன்று மீண்டும் அதே சவாலை நாம் முன்வைக்கிறோம். விமல் வீரவன்ச எமக்கெதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் ஒரு மணித்தியாலத்திற்குள் எமது அமைப்பை கலைத்து விட தயாராக இருக்கின்றோம்.
அன்று அவர்களது அரசாங்கமே பதவியிருந்தது. அமைச்சர் டிலான் பெரேராவும் இவ்வாறான குற்றச்சாட்டுகளையே முன்வைத்தார். குற்றப்புலனாய்வு பிரிவின் மூலம் அன்று எமக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.
நாம் அன்று இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதம் இருக்கிறதென்றோம் கூரகல புனித பூமி பிரதேசம் எமக்குச் சொந்தமானதென்றோம் ஹலால் பிரச்சினை பற்றி குரல் எழுப்பினோம்.
நாம் அன்று கூறியவைகள் வெறும் பொய்யா? அனைத்தும் உண்மையென்று இன்று நிரூபணமாகியுள்ளது.
விமல் வீரவன்ச ஒவ்வோர் இடத்துக்கும் சென்று எம்மீது பொய் பிரசாரங்களை மேற்கொள்ளாது எம்மீது சந்தேகங்கள் இருந்தால் நேரடியாகப் பேசும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இதை விடுத்து முஸ்லிம் அடிப்படைவாத இயக்கங்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு எம்மைப் பற்றி பொய்யான கருத்துகளை மேடையேற்ற வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
பொதுபலசேனா அமைப்பு விமல் வீரவன்சவுக்குப் பயந்து தனது செயற்பாடுகளிலிருந்தும் விலகிக் கொள்ளாது எமது நியாயமான போராட்டங்களை தொடர்ந்தும் ஈடுபடுவோம் என்றார்.