பனாமா ஆவணங்களில் எனது பெயரும் உள்ளதென கூறி எனது பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். நான் குற்றவாளியென மக்கள் விடுதலை முன்னையின் தலைவர் அனுரகுமாரவும், தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஸம்மிலும் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும். எனது கருத்தை 24 மணித்தியாலத்தில் மீளப்பெறாவிட்டால் வழக்கு தாக்கல் செய்வேன் என மின்சார சபையின் முன்னாள் தலைவர் வித்தியா அமரபால தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயாராகவே உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பனாமா அறிக்கை என்ற பெயரில் அண்மையில் சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட மொசாக் பொன்சேகா நிறுவனத்துடன் தொடர்புடைய இரகசிய ஆவணத்தில் இலங்கையர்கள் 65 பேரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அந்த அறிக்கையில் முன்னாள் மின்சார சபை தலைவரும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் ஆலோசகருமான வித்தியா அமரபாலவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் இன்று அவர் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 2010ஆம் ஆண்டு நான் மின்சார சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட போது மின்சாரசபை நாற்பது பில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருந்தது. எனினும் அடுத்த ஒரு வருடத்தில் நான் இலங்கை மின்சார சபைக்கு 5 பில்லியன் ரூபாய்கள் இலாபத்தை ஈட்டிக் கொடுத்தேன். அப்படியாயின் என்னால் ஒரு ஆண்டில் மாத்திரம் நாற்பத்து ஐந்து பில்லியன் ரூபாய்களை இலங்கை மின்சார சபைக்காக ஈட்டிக்கொடுக்க முடிந்துள்ளது. அவ்வாறான நிலையில் என்மீது அப்போதும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும் அந்த தவறுகளை அப்போதே ஊடகங்கள் சரிசெய்துவிட்டன. அவ்வாறு இருக்கையில் இப்போது மீண்டும் அந்த பழைய அறிக்கையினை வைத்து என்மீது குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளனர்.