பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசு மாடுகளில் 3 ஆயிரத்து 635 பசு மாடுகள் ஆயுட் காலத்திற்கு முன்னர் திடீர் திடீரென மரணமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக காப்புறுதி இழப்பீடுகளை பெற முடியாமல் போயுள்ளதாகவும் கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மொனிக் பார்ம் மற்றும் ரிதியகம ஆகிய அரச பண்ணைகளில் மாத்திரம் உயிரிழந்த பசுக்களின் எண்ணிக்கை என அதில் கூறப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவரான பேராசிரியர் சரித்த ஹேரத் நேற்று முன்தினம் கோப் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2009 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த பண்ணைகளில் மாத்திரம் இந்த பசுக்கள் இறந்துள்ளன.
இதனிடையே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் காலநடை வளங்கள் அமை்சசராக இருந்து பீ. ஹெரிசன், 20 ஆயிரம் பசுக்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார்.
திட்டத்தின் ஆரம்பத்திலேயே அதிகளவான மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடந்ததாக கூறப்பட்டது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள் பல தொற்று நோய்களுக்கு உள்ளானவை என அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.